டெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்! உள்துறை அமைச்சகம்

டெல்லி: தலைநகர் டெல்லியில்  மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை இலவசம் என மத்திய  உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 லட்சத்தை நெருங்கி உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 37,975 பேருக்கு புதிதாக தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  91,77,841 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,34,218 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்  4,38,667 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில்,நேற்று மட்டும்  42,314  பேர் குணமடைந்து உள்ளனர்.

அதேவேளையில் தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு மீண்டும் உச்சம்பெற்றுள்ளது.  நேற்று மட்டும் 4454 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,34,317 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 37,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 4,88,476 பேர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8512 ஆக உயர்நதுள்ளது. நேற்று மட்டும் 121 பேர் குணமடைந்து உள்ளனர்.

இதுவரை மாநிலத்தில் 58.5 லட்சம் பேருக்கு தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.  மேலும்,  கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அன்சாரி நகரில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் உடனிருந்தார்.

அதையடுத்து, தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்படும். இதற்காக  நடமாடும் கொரோனா பரிசோதனை  அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இந்த வேன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொரோனா சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும,  இதற்கான  பிசிஆர் பரிசோதனை கட்டணமான 499 ரூபாயை ஐ சி எம் ஆர் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.