இரத்தப் பரிசோதனையில் கொரோனாவைக் கண்டறியும் அமெரிக்க மருத்துவர்கள்…

வாஷிங்டன்

      உலகைப் பேரழிவிற்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை  மூச்சுப்பாதைத் துகள்களின் சோதனை மூலம்  கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில்,  இரத்தத்தில் உருவாகியுள்ள கொரோனா எதிர் உயிரி மூலம் விரைவாக கண்டு பிடித்து வருகின்றனர்.

      அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 16845 பேரிடம் கொரோனாத் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. இது சீனாவைக் காட்டிலும் அதிகம். தற்போது அமெரிக்காவில்  மிகவும் நெருக்கடிச் சூழல் நிலவி வருகிறது.

 

 

   ஒருவரின் உடலை கொரோனா வைரஸ் தாக்கினால் அதனை எதிர்க்க, அவரின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி  எனப்படும் ஆன்ட்டிபாடி – எதிர் உயிரிகள் உருவாகும். எனவே பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை சோதித்து அதில் கொரோனா எதிர் உயிரிகள் இருந்தால் அந்நோயை உறுதிப்படுத்தலாம்.

  இதன் மூலம் நோய் பரவும் வேகத்தைக் கண்டறிவதோடு, அறிகுறிகளே இல்லாதவர்களிடமும் சோதனை நிகழ்த்த முடியும். இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நம்மிடம் அதிகளவில் சோதனைகள் நடத்தப்படுவதால் நிறைய பேருக்கு நோய்த்தொற்றை கண்டறிய முடிகிறது. சீனாவில் இந்தளவு சோதனைகள் மக்களிடம் நடத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியே என்றார்.

    மூச்சுப் பாதை சார்ந்த துகள்களின் ஆய்வு முடிவுகளுக்கு நாட்கள் அதிகம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.