பிரிட்டனில் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை முயற்சி தொடக்கம்

வுத் ஹாம்ப்டன்

பிரிட்டனில் துடைப்பான் இல்லாமல் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட துணி அல்லது பஞ்சு துடைப்பான் மூலம் தொண்டையிலிருந்து சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்வது வழக்கமாகும்.   ஒரு சில நேரங்களில் தொண்டையில் மாதிரிகள் இல்லாத போது சேகரிப்பது கடினமான ஒன்றாகி விடுகிறது.   அத்துடன் பலருக்குத் தொண்டையில் பஞ்சு அல்லது  துணியைச் செலுத்துவது ஒவ்வாமையை உண்டாக்குகிறது.

இதையொட்டி அமெரிக்காவில் நேரடியாக எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.   இது வெற்றிகரமாக அமைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது,  இதில் பரிசோதனை செய்யப்படுபவர் ஒரு சிறு கிண்ணத்தில் எச்சிலைத் துப்பி அதைப் பரிசோதனை செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வருகிறது

இதே முறையில் கொரோனா பரிசோதனை பிரிட்டனில் சவுத் ஹாம்ப்டன் பகுதியில்  தொடங்கப்பட்டுள்ளது.   இந்த முறையில் 48 மணி நேரத்தில் முடிவுகள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது,   சோதனை முறையில் நடைபெறும் இந்த நடவடிக்கை நான்கு வாரங்களுக்கு நடைபெற உள்ளன.   இதில் மொத்தம் 30000 முதல் 40000 பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.