சென்னை: சேலம், கோவை மற்றும் சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.

சுகாதார தடுப்பு நடவடிக்கையாக தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவை அரசு நிறுவனங்களின் ஆய்வகங்களில் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் செய்தியில் கூறி உள்ளதாவது: சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்படும். இந்த ஆய்வகம் உடனடியாக செயல்பட தொடங்கும். கொரோனா பரிசோதனை ஆரம்பமாகும் என்று கூறி உள்ளார்.

இதே போன்று அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகியவற்றிலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதித்து இருப்பதாக கூறி இருக்கிறார். இனி இந்த 2 மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.