சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.  அதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதுவரை உலக அளவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது.

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது.  அவர்களில் 39 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்திலும் இதுவரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந் நிலையில், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

அங்கு கொரோனா தொற்றுக்கான சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. கொரோனா நோயாளி என உறுதி செய்யப்பட்டால் அங்கேயே இலவச சிகிச்சை அளிக்கப்படும் என சிஎம்சி மருத்துவமனை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை ஆகிய இரண்டும் கொரோனா பரிசோதனை செய்யலாம் என்று 2  நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதியளித்தது. கொரோனா பரிசோதனைக்கு 4500 ரூபாய் கட்டணத்தையும் மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.