சென்னை

சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா பரிசோதனைகள் வீதம் நடத்தப்பட வேண்டுமென ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 12448 பேர் பாதிப்பு அடைந்து அதில் 85 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கொரோனா தாக்கம் குறையாமல் உள்ளது.  இது குறித்து இ மெயில் மூலம் நடந்த பேட்டி ஒன்றில் ஐ சி எம் ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் இடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர், “புவியியல் ரீதியாகத் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்கள் மற்றும் சென்னை நகரப் பகுதிகள் மட்டுமே அதிக அளவில்  கொரோனா பாதிப்பில் உள்ளன.   எனவே பரிசோதித்தல், கண்டறிதல், தனிமைப்படுத்தல் என்னும் நடவடிக்கைகள் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.  இதில் முக்கியமானது பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளை கவனிப்பதாகும்.  அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோ அல்லது வீட்டுத் தனிமையிலோ வைக்கப்பட வேண்டும்.   அது மட்டுமின்றி இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது மற்ற மாநிலங்களை விட அதிக பரிசோதனைகள் நடைபெறுகின்றன. அதைப் போல் தொடர்புடையோரைக் கண்டறியும் பணியும் நன்கு நடைபெறுகிறது.  நல்ல மருத்துவமனை  வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்களால் இது சாத்தியமாகி உள்ளது.  ஆனால் சமூக இடைவெளி சரியாகப் பின்பற்றப்படுவது இலை, குறிப்பாக கோயம்பேடு பகுதியில் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டு அது மாநிலம் எங்கும் பரவி உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டத்தில் உள்ள தொற்றைப் பொறுத்து பரிசோதனை அளவு நிர்ணயம் செய்ய வேண்டும்.  இதை வைத்துப் பார்க்கும் போது தமிழகத்தில் முழு அளவில் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் சென்னை நகரில் ஒரு லட்சம் பேருக்கு 100 பரிசோதனைகள் என்னும் விகிதத்தில் சோதனை நடக்க வேண்டும். இதனால் சென்னையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மற்ற மாநிலங்களில் இருந்து சென்னை வருவோர் அதிகம் என்பதால் சென்னை நகருக்கு அதிக அளவில் சோதனைகள் தேவைப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.