பூலோக வைகுண்டத்திலும் பக்தர்களுக்கு கொரோனா தெர்மல் ஸ்கேனிங்… சோதனை…

திருச்சி:

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமாக கருதப்படும் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதர் குடிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்திலும் பக்தர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. அனைத்து வாயில்களி லும் தெர்மல் ஸ்கேனிங் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்…

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள 3 நுழைவு வாயில்களிலும்  பக்தர்கள் தெர்மல் ஸ்கேனிங் சோதனை மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும்,  கோயில் வளாகத்தில் பக்தர்களிடையே  கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில்  தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மதுரை மீனாட்சி, பழனி முருகன் கோவில் வரும் பக்தர்கள் முகக்கவசம் அணி வலியுறுத்தப்பட்டு உள்ளது. நோய்வாய்ப்பட்ட மற்றும் சோர்வு, மூச்சுத் திணறல், காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும்  கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், பக்தர்கள் நுழையும், கிழக்கு, வடக்கு, தெற்கு கோபுர வாசல்களில், காய்ச்சலை கண்டறியும் அதிநவீன தெர்மல் ஸ்கீரினிங் மீட்டர்களை கொண்டு பக்தர்களை பரிசோதனை செய்வது இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

பூலோக வைகுண்டமாக கருதப்படும் ஸ்ரீரங்கத்திற்கு தினமும் 10ஆயிரத்துக்கும் மேற்கொண்ட பக்தர்கள் வரும் நிலையில், அவரிகளிடையே கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் தெர்மல் ஸ்கீரினிங் சோதனையை இன்று கோவில்  இணை ஆணையர் ஜெயராமன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டு கோயில்களில் முதல் முறையாக இந்த முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்கள் அதிகமாக வரும் முக்கிய திருத்தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறைத் தீவிரப்படுத்தி உள்ளது.