சென்னை:

மிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும், பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழக தலைமைச்செயலாளர்  மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக இன்று வழக்கு விசாரணையின்போது, இருமல், சளி, காய்ச்சல் உள்ள வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றம் வர வேண்டாம் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும் முக்கிய வழக்குகள் தவிர மற்ற வழக்குகளை விசாரணையை தாமதப்படுத்தும்படி முறையிட்டனர்.

இந்த நிலையில், தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது, உயர் நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவசர வழக்கை மட்டும் விசாரிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  தலைமை நீதிபதி சாஹி, மூத்த நீதிபதிகள், தலைமை செயலாளர் சண்முகம்,அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,  சுகாதாரத் துறை செயலாளர் பியூலா ராஜேஷ் உள்பட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.