சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே  ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக, வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள , 10 ஆம் வகுப்பி பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரத்தகவல்கள் பரவி வருகின்றன.

மாணவர்களின் நலன் கருதி காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்படலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால், 10ம் வகுப்பு தேர்வு உள்பட சில தேர்வுகளை ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.