கொரோனா அச்சுறுத்தல்: வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டது, அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலிகள் ரத்து…

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரபலமான  வேளாங்கண்ணி பேராலயம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல மயிலாப்பூரில் உள்ள பிரபலமான சாந்தோம் தேவாலயம் உள்பட பல தேவாலயங்களிலும்  திருப்பலிகள் ரத்து செய்யப்படுவதாக மயிலாப்பூர் ஆர்ச் பிஷப்  தெரிவித்து உள்ளார்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக் கல்லூரிகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காங்கள், சினிமா தியேட்டர்கள் வழிபாட்டு ஸ்தலங்கள் உள்பட மக்கள் கூடும் பகுதிகளை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன.

இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள பிரபலமான பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், மீனாட்சி கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும்  பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, நாகை மாவட்டத்தில் பிரபலமான அன்னை வேளாங்கண்ணி ஆலயமும் வரும் 31ந்தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் அனைத்து தேவாலயங்களிலும் திட்டமிடப்பட்ட அனைத்து பொது வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் மார்ச் 31 வரை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பொதுமக்களுக்கு அளித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டிய கட்டாயக் கடமை நமக்கு இருக்கிறது. இந்த நாட்களில் தமிழகத்தில் அனைவரும் மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி, திருவழிபாடுகள் தழுவிய கீழ்காணும் தற்காலிகமான ஏற்பாடுகளை நமது சென்னை – மயிலை உயர் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகள், நிறுவனங்கள், துறவியர் இல்லங்கள், ஆகியவற்றில் நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.

1.  வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும் ஞாயிறு கடன் திருநாள் திருப்பலிகள் மற்றும் தினசரி திருப்பலிகளில் பங்கெடுப்பதிலிருந்து இறைமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

2.தவக்காலத்திற்கென்று சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்த திருப்பயணங்கள், தியானங்கள், திருச்சிலுவைப் பாதைகள், பொது ஜெப வழிபாடுகள், பொது ஆராதனைகள் ஆகியவை கைவிடப்படுகின்றன.

3.நம் குடும்பங்களில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு கொரோனா நோயின் தொற்று வேகமாகப் பரவும் என்பதால், 60 வயதுக்கு மேற்பட்டவரக்ள் வீடுகளில் இருந்தவாறு ஆன்மீக செயல்களில் ஈடுபட்டு உடல் நலனைப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4.வீடுகளில் உள்ள நோயுற்றோருக்கும் நடக்க முடியாத முதியோருக்கும் பொதுவாக முதல் வெள்ளிக்கிழமைகளில் அல்லது வேறெந்த நாளிலோ திவ்விய நற்கருணை வழங்கும் வழக்கம் இருப்பின், அந்தந்த பங்குத் தந்தையர்கள் இறைமக்களின் ஆன்ம நலன் கருதி அவர்களுக்கு அருட்சாதனங்களை வழங்க ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5.ஞாயிற்றுக்கிழமைகள் ஆண்டவருடைய நாள் என்பதாலும் மேலும் இது தவக்காலமாக இருப்பதாலும் நாம் கீழ் காணும் சிறப்பு மன்றாட்டு மற்றும் ஒறுத்தல் முயற்சிகளை வீடுகளில் இருந்தவாறே மேற்கொள்ளுமாறு அழைக்கின்றேன்.

* வீடுகளில் குடும்பமாக அமர்ந்து குடும்ப செபமாலை செபித்தல், திருப்பாடல்கள் மூலம் செபித்தல், இறைவார்த்தையை வாசித்து தியானித்தல், சுருக்கமான சிலுவைப்பாதை மேற்கொள்ளல் ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன.

* ஏற்ற வசதிகள் இருப்பின், மாதா தொலைக்காட்சி, அற்புதர் இயேசு டிவி மற்றும் யூடியூப் அலைவரிசை வழியாக தரப்படுகின்ற SanThome TV இணையதள சேவையைப் பயன்படுத்தி திருவழிபாடுகளில் ஆன்மீகப் பங்கேற்பு செய்து செபிப்பது வரவேற்கப்படுகிறது.

* பொதுவாகவே சென்னை மாநகரில் உள்ல அனைத்து தேவாலயங்களிலும் வழிபாடுகளின்போது மக்கள் அதிக்மாகக் கூடுவதால், இந்த் அநாட்களில் இறைமக்கள் பெரும் குழுக்களாக ஆலயங்களில் கூடுவதைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் வேண்டுமானல் தனி செபம் செய்ய ஆலயத்தைப் பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

அன்புக்குரியவர்களே மிகவும் இக்கட்டான சவால் நமக்குமுன் இருப்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். ஆலயத்திற்கு வராமல், திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணையைப் பெறாமல் இருப்பது கட்டாயம் கடினம்தான். ஆயினும் இன்றைய சூழலில், நம் அடுத்திருப்பவரின் நலனையும் காப்பாற்ற வேண்டிய மேலான பொறுப்பினை உணர்ந்து, மேலே குறிப்பிட்ட ஆன்மிக ஒறுத்தல்களை கொரோனா நோயிலிருந்து நாம் முழு விடுதலை பெறுவதற்காக ஒப்புக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

“இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் செவி சாய்த்தார்” என்ற இறை வார்த்தையில் திடம் கொண்டு, காகும் இறைவன் நாம் எதிர்கொண்டுள்ள இப்போராட்டத்தில் நம்மையும் நம் உறவுகளையும் இந்த அழகான உலகத்தையும் பாதுகாப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இந்த சவாலைக் கையிலெடுப்போம். இறை இரக்கத்திற்கா தொடர்ந்து மன்றாடுவோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.