கொரோனா பீதி: ஒடிசாவில் மார்ச் 31ந்தேதிவரை தேவாலயங்களுக்கும் விடுமுறை…

புவனேஷ்வர்:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,  ஒடிசாவில் மார்ச் 31ந்தேதிவரை அனைத்து தேவாலயங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

உலகநாடுகளை பீதிக்குள்ளாகி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், கல்விநிறுவனங்கள் உள்பட, மக்கள் கூடும் பகுதிகளை மூட உத்தரவிட்டிருப்பதுடன், வழிப்பாட்டுத் தலங்கள் உள்பட மக்கள் கூடும் விழாக்களையும் தவிர்க்க கோரி உள்ளது.

இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளன.

கட்டாக்கில் உள்ள ஒடியா பாப்டிஸ்ட் தேவாலயம் மற்றும் புவனேஸ்வரில் உள்ள கிறிஸ்துவின் தேவாலயங்கள்,  ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை உள்பட  அனைத்து நடவடிக்கைகளையும் மார்ச் 31 வரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.

பெர்ஹாம்பூரில் உள்ள ஓடியா பாப்டிஸ்ட் சர்ச் (சிஎன்ஐ) குர்தா மற்றும் ஜட்னியில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயங்களும் இதே போன்ற முடிவுகளை எடுத்திருப்பதாக அறிவித்து உள்ளன.