காவல்துறையினரையும் மிரட்டும் கொரோனா… சென்னையில் 800 பேர் பாதிப்பு… வேலூரில் காவல்நிலையங்கள் மூடல் ..

சென்னை:

மிழக்ததில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  ஏராளமான காவல்துறையினரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 800 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வேலூரில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில்உள்ள 25 காவல்நிலையங்களையும்  2 நாட்கள் மூடி, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது.

சமீபத்தில் சென்னையில் கொரோனாவுக்கு பலியான மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பதாக கூறப்படுகிறது. இது காவல்துறையிரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், நேற்று (19ந்தேதி)  ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்தம், 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டும்  1322 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38327 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் பால முரளி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அவரது இறுதிச் சடங்கில் பங்கு கொண்ட ஐபிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே  சென்னை காவல்துறை ஐ.ஜி அலுவலகத்தில்பணியாற்றி வந்த பல காவலர்கள், கோயம்பேடு பகுதியில் பணியாற்றிய பல காவலர்கள் உள்பட, திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், சென்னை காவல்துறையில் டிஐஜி தகுதியில் இருக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

சென்னையில் மட்டும் இதுவரை  800 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில், இதுவரை 321 பேர் குணமடைந்து இருப்பதாகவும், ஒருவர் மட்டுமே பலியாகி உள்ள நிலையில், மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 3 ஐபிஎஸ் அதிகாரிகள் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 25 காவல் நிலையங்களும் 2 நாட்கள் மூடப்படும் என்று வேலூர் எஸ்.பி கூறியுள்ளார். காவல்நிலையத்தின் உள்ளே யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.