கொரோனாவுக்கு இன்று மட்டும் 118 பேர் பலி: 8 நாட்களில் 873 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் இன்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 5883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4879 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

தொடர்ந்து 6வது நாளாக கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து அதிர்ச்சியை தருகிறது. இன்று கொரோனா தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 81 பேர் அரசு மருத்துவமனையிலும் பலியாகி உள்ளர்.

இந்நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,808 ஆக பதிவாகி உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,290 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 109 பேரும், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேரும் இன்று பலியாகி உள்ளனர். கடந்த 8 நாட்களில் மட்டும் 873 பேர் மரணம் அடைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.