சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  தற்போதையை நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.  பலி எண்ணிக்கை  208 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான சிகிச்சை கட்டணம் கேட்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கொரோனா சிகிசைக்கு உரிய கட்டணம் தொடர்பான  விவரங்களை த மிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சைக்கான கட்டண விபரங்களை வெளியிட்டார்.

அதன்படி கொரோனா அறிகுறி இல்லாதவர்கள்,  லேசான அறிகுறியுள்ளவர்களுக்கு குறைந்த பட்ச  சிகிச்சை கட்டணமான நாள் ஒன்றுக்கு  ரூ.5,000 ஆகவும், அதிகபட்சமாக ரூ.4லட்சத்து 31ஆயிரத்து 411 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  கொரோனா சிகிச்சையும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய தனது அறிக்கையை அளித்தது.

அதனடிப்படையில் கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி,

பொது வார்டில் அனுமதிக்கப்பட்டோர் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு அதிகபட்ச தொகுப்பு கட்டணமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணம்கிரேடு ஏ1, ஏ2 – ரூ. 10,000 முதல்- ரூ. 15,000 வரைகிரேடு ஏ3, ஏ4 – ரூ. 9000 முதல் – ரூ. 13,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

1. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

4. மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவப் பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும்.

இந்த புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன் பெறத் தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.