டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா வைரஸ், சுமார் ஓராண்டுகளை கடந்த நிலையில், தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், வெவ்வேறு வகையில் உருமாற்றதுடன் அதன் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், உலக நாடுகளில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதன்படி 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். முதல் டோஸ் போட்டுக்கொண்ட 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன்பிறகே தடுப்பூசியின் செயல்பாடு இருக்கும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக ஜனவரி 16ந்தேதி முதல் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள்,  சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்கள் முடிவடைந்த நிலையில், 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 13ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.   முதல் நாளிலேயே, 84ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,  2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதை பெரும்பாலான முன்களப் பணியாளர்கள் விரும்பவில்லை, தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர் என, அரசு வழங்கியுள்ள தரவுகள் (Data)  மூலம் தெரிய வந்துள்ளது.

 ஜனவரி 16 ஆம் தேதி  கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல்நாளில், நாடு முழுவதும முதல் டோஸ் கொரோனா  தடுப்பூசி  1,91,000 க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது. ஆனால், அவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி பெற வேண்டிய பிப்ரவரி 13ந்தேதி அன்று, வெறும்,  7,668 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், கடந்த 3 நாட்களில்,  கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட 61,54,894 சுகாதார ஊழியர்களில், 97,732 பயனாளிகளுக்கு மட்டுமே இதுவரை இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

2வது டோஸ் போடுவதில் பெரும்பாலான மருத்துவர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் ஆர்வம் காட்ட நிலை தொடர்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து  கருத்து தெரிவித்துள்ள டெல்லியில் உள்ள கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) ஆலோசகருமான சுனேலா கார்க்,

“நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து பலரும் பாதகமான எதிர்விளைவுகள் குறித்து  புகாரளித்துள்ளனர். முதல் டோஸைத் தொடர்ந்து சிலர்  பாதகமான எதிர்விளைவுகளை அனுபவித்ததால், 2வது டோஸ் போட தயங்குகிறார்கள். தடுப்பூசிக்குப் பிறகு சில எதிர்விளைவுகளை அனுபவிப்பது இயற்கையானது என்றாலும், அவர்கள் ஏற்படுத்திய விளைவுகள், பயனாளிகள்  2வது டோஸ்  தடுப்பூசிக்கு செல்ல தயங்குகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி பெறுவதில் மக்களிடையே ஆர்வமில்லாதது குறித்து, மத்திய சுகாதாரத்துறை ஆய்வு நடத்தி வருகிறது.