கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா உள்பட உலக நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யா கோவிட்19 தடுப்பூசி தயாராகி விட்டதாக தெரிவித்து உள்ளது. இறுதிக்கட்ட  மனிதர்கள் மீதான சோதனைக்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸிற்கு அனுமதி பெறப்பட்ட முதல் தடுப்பூசி இது என்று கூறப்படுகிறது. மேலும் பல நாடுகளும் தடுப்பூசி விவகாரத்தில் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவிலும் ஆகஸ்டு 15ந்தேதி கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு வரும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், அதற்கு சாத்தியமில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. அதுபோல கொரோனா தடுப்பூசிகள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்திற்கு முன்பு பயன்பாட்டிற்கு வருவது சாத்தியமில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி விநியோகம், விலை என பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தடுப்பூசி விநியோகம் மற்றும் விலை  தொடர்பாக தெளிவாக வரையறுக்கப்பட்ட, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தடுப்பூசி அணுகல் மூலோபாயத்திற்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

COVID-19 தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.

இதற்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட, உள்ளடக்கிய மற்றும் சமமான தடுப்பூசி அணுகல் உத்தி தேவைப்படுகிறது, இது பொதுமக்களுக்கு கிடைக்கும் போது மலிவான  மற்றும் நியாயமான விநியோகத்தை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும், அதை இப்போதே செய்ய வேண்டும்.

இவ்வாறு ராகுல் வலியுறுத்தி உள்ளார்.