கொரோனா தடுப்பு மருந்து – 14 நாட்கள் கழித்தே தாக்கம் தெரியுமாம்..!

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ்ஸுக்கு இடையில் 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டுமெனவும், மருந்தின் விளைவானது இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்கள் கழித்தே தெரியவரும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 14 நாட்கள் கழித்தே தாக்கம் தெரியவரும் என்பதால், பொதுமக்கள் கொரோனா குறித்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல், கோவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம், முன்னுரிமை அடிப்படையில் துவக்கப்படவுள்ளது. முதலில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படவுள்ள தடுப்பு மருந்துகள், பாதுகாப்பானவை மற்றும் நம்பகமானவை என்று அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனால் ஏதேனும் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ? என்று யாரும் பயப்பட வேண்டாமெனவும் கூறப்பட்டுள்ளது.