காரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில  முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில்,  பட்டினச்சேரி, காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களில் பேரிடர் காலங்களின்போது, வலை மற்றும் இஞ்சின்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள புதுச்சேரி அரசு சார்பில் 19 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டிடங்களை திறந்து வைத்து பேசிய  முதல்வர் நாராயணசாமி,  மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான மீனவ மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு நிதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பாரதியஜனதா கட்சி பீகார் தேர்தலில் வெற்றிபெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்  என அந்த மாநில மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிரடியாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து, தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் தடுப்பூசி இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.