கொரோனா தடுப்பூசி சமீப தகவல்கள் : பிரேசிலில் மீண்டும் சோதனை தொடக்கம்

பிரேசிலியா

கொரோனா தடுப்பூசி குறித்த சமீபத்திய தகவல்கள் வருமாறு :

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி பரிசோதனை இறுதிக் கட்டத்தில் உள்ளது.  அவ்வகையில் அதிகம் பாதுகாப்பு மற்றும் திறனுடைய ஒரு தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.   இந்த தடுப்பூசி மிகவும் அதிக திறனுள்ள ஆண்டிபாடிகளை விலங்குகளின் உடலில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிகளுக்கு நடந்த சோதனையில் மற்ற தடுப்பூசிகள் ஆறு மடங்கு கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்கிய போது  இந்த மருந்து மிகவும் திறன் உள்ளதால் 10 மடங்கு ஆண்டிபாடிகளை உருவாக்கி உள்ளதாகச் சோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.   மேலும் இந்த தடுப்பூசி விலங்குகள் உடலில் உருவாக்கிய ஆண்டிபாடிகள் மனித உடலில் உருவாகக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரேசில் நாட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒரு ஆர்வலர் மரணம் அடைந்ததையொட்டி அக்டோபர் 12 ஆம் தேதி முதல் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன.  அமெரிக்கத் தடுப்பூசிக்கான இந்த மூன்றாம் கட்ட பரிசோதனையில் 60000 பேர் கலந்துக் கொண்டனர்.   

இவ்வாறு மூன்றாம் கட்ட பரிசோதனைக்குத் தேர்வு செய்யப்பட்ட தடுப்பூசிகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒன்றாகும். தற்போது பிரேசிலில் மீண்டும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்கி உள்ளது. 

சீன மருந்து நிறுவனமான கான்சினோ பயாலஜிஸ் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த மருந்து சுமார் 10000 முதல் 15000 பேருக்குச் சோதனை முறையில் அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்செலோ எப்ரார் தெரிவித்துள்ளார்.   வரும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்நாட்டின் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.