சென்ன‍ை: நாடெங்கிலும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை என்ற தகவல்கள் உலாவுகையில், தமிழ்நாட்டிலோ நிலைமை சற்று மாறாக உள்ளது. இங்கு கைவசம் இருக்கும் டோஸ்களை, எடுத்துக்கொள்ள ஆட்கள் இல்லாத நிலை உள்ளது.

கடந்த ஏப்ரல் 8ம் தேதி வரையான நிலவரப்படி, 16 லட்சம் டோஸ்கள் வரை இருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக மக்களில் பெரும்பாலானோர், தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்கு, ஆர்வத்துடன் முன்வரவில்லை என்பதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த தகவல் மகிழ்ச்சிகரமான ஒன்றல்ல என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட 54 லட்சம் டோஸ்களில், இதுவரை, 37 லட்சம் வரையிலான டோஸ்களே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ஏப்ரல் 1 முதல் 8 வரையிலான தேதிகளில், ஒருநாளைக்கு சராசரியாக 37000 டோஸ்களே விநியோகம் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதேசமயம், தடுப்பு மருந்துகள் விஷயத்தில், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சிறிதுகாலம் ஆகும் என்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கடந்த பிப்ரவரியில், முதற்கட்ட தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதில், சுகாதாரப் பணியாளர்கள் குறைந்தளவே ஆர்வம் காட்டியதையும் உதாரணமாக கூறுகின்றனர்.