சென்னை: தமிழகத்தில் நாளை ஜனவரி 2 ம் தேதி முதல் இலவச கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திட்டமிட்டபடி ஒத்திகை  தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இலவச கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் மற்றும் 6 லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.  தமிழகத்தில் சென்னை உள்பட   11 இடங்களில்  கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கி உள்ளது.  நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தடுப்பூசி ஒத்திகை தொடங்கி உள்ளது.   தமிழகம் முழுவதும் 17 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.  சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த ஒத்திகையில் தடுப்பூசி போடப்பட மாட்டாது. தடுப்பூசி வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நடத்தப்படும். 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி செலுத்த நேரம் சரியாக இருக்குமா என பார்க்கப்படும். மக்கள் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஒத்திகை பார்க்கப்படும்” என தெரிவித்தார்.  தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு தடுப்பூசி போடப்பட்டது, வாழ்த்துக்கள் என்று தகவல் வரும் என கூறினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி சோதனை இன்று நடைபெறுகிறது தடுப்பூசி செலுத்துதல் குறித்து திட்டமிடல், மதிப்பிடுதல், சவால்களை அடையாளம் காணுதலுக்காக இந்த சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.