பாரிஸ்

பிரான்ஸ் நாட்டு மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து அனைத்து நாடுகளுக்கும் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பு மருந்து அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை.   பல நாடுகளில் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அனைத்தும் இன்னும் சோதனை வடிவில் மட்டுமே உள்ளன.   கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகப் பெரிய மருந்து நிறுவனமான சனோஃபி கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.   இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் பெருமளவில் நிதி உதவி செய்துள்ளது.  எனவே இந்த மருந்து முதலில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என சனோஃபி நிறுவன அதிகாரி பால் ஹட்சன் அறிவித்தார்.

இதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இந்த நாடுகளின் பொதுவான செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டி கீர்ஸ்மெக்கர், “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து உலக மக்களின் நலனுக்கானது.  எனவே அந்த மருந்து உலின் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அளிக்கப்படவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சனோஃபி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஒப்புக் கொள்ளக்கூடியது அல்ல எனத் தெரிவித்த பிரான்ஸ் அரசு  இந்த நிறுவனத்தின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.  பிரான்ஸ் அரசு அதிகாரிகள் அடுத்த வாரம் இது குறித்து நிறுவன இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.   இந்த தடுப்பூசி கண்டுபிடிக்க உலக அளவில் அனைத்து நாடுகளும் நிதி திரட்டிய போது அமெரிக்க அதில் பங்கேற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.