கொரோனா வைரஸ் முதன்முதலில் ஜனவரி மாதம் தோன்றியதிலிருந்து 170 தடுப்பு மருந்துகள் இப்போது வரை ஆய்வில் உள்ளன. சுமார் 15 மருந்துகள் ஏற்கனவே மனித சோதனைகளில் உள்ளன. உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்ததாக ரஷ்யா ஏற்கனவே அறிவித்துள்ளது. – ஆனால் அது போதுமான அளவு பரிசோதிக்கப்படவில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கோவிட் -19 தடுப்பு மருந்து உருவாக்கத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களுடைய மருந்து இரட்டைப் பாதுகாப்பைத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் ஜெர்மனியிலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் தடுப்பு மருந்துகள் இந்த ஆண்டு தயாராகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு முன்னணி நிபுணர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் தடுப்பு மருந்து பணிக்குழுவின் தலைவரான கேட் பிங்காம்இதைப்பற்றி கூறும்போது, “இந்த ஆண்டு ஒரு தடுப்பு மருந்தை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் எங்களிடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். இரண்டு சாத்தியமான மருந்துகள் தயாராகி வருகின்றன. ஒன்று, ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்து, மற்றொன்று பயோஎன்டெக்கிலிருந்து ஜெர்மன் தடுப்பு மருந்து. முடிவுகள் சரியாக வருமானால், இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு வழங்கப்படலாம்,” என்றார்.

ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட ஆக்ஸ்போர்டு சோதனைகளின் முழு முடிவுகள், 1,077 பிரிட்டிஷ் வயதானவர்கள் மீதான ஆரம்ப சோதனைகள், தடுப்பு மருந்து வலுவான ஆன்டிபாடி மற்றும் T-செல் செயல்பாடுகளை தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்தது. இது ஒரு பூஸ்டர் ஊசிக்கு பிறகு மேலும் மேம்படலாம். இக்கண்டுபிடிப்பு நம்பிக்கைக்குரியது, ஏனென்றால் T-செல்கள் பல ஆண்டுகளாக நீடித்து இருக்கும். அதே ஆன்டிபாடிகள் சில மாதங்களுக்குள்குறையக்கூடும் என்று தனி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இத்துடன் எந்தவொரு மோசமான பாதகமான பக்க விளைவுகளும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏற்படும் காய்ச்சல் போன்ற சிறிய பக்க விளைவுகளை பாரசிட்டமால் மருந்துக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று தி லான்செட்டில் வெளியான இரண்டு ஆய்வு ஆவணங்கள் தெரிவித்தன.

ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தின் இந்த முடிவுகள் “மிகவும் முக்கியமான மைல்கல்” என்று நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். இது கிறிஸ்துமஸுக்கு முன்பு ஒரு தடுப்பு மருந்து தயாராகலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. ஆகஸ்ட் 22 அன்று, தலைமை மருத்துவ அதிகாரி இங்கிலாந்துக்கு 2021 குளிர்காலத்திற்கு முன்னர் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வாய்ப்பில்லை என்று எச்சரித்தார். ஆனால் வணிகச் செயலாளர் அலோக் சர்மா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பரிசோதனை சிறப்பாக முன்னேறி வருவதாகவும், ஒரு தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் எவ்வளவு விரைவாக ஒன்றிணைந்தார்கள் என்பதில் அவர் “மிகவும் பெருமிதம்” அடைந்தார். திரு ஷர்மா ஆக்ஸ்போர்டு மற்றும் இம்பீரியல் கல்லூரியில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக மேலும் 84 மில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அட்ரியன் ஹில் மற்றும் அவரது குழு மீது தேசத்தின் கண்கள் – ஏன் உலகம் முழுவதின் கவனமும் குவிந்துள்ளன. 340 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஒப்பந்தங்களை பிரிட்டன் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் தடுப்பு மருந்து

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளித்துள்ளதாக விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ஆனால் விஞ்ஞானிகள் இம்மருந்தின் சோதனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். தடுப்பு மருந்தின் தற்போதைய மனித பரிசோதனையில் 40,000 க்கும் அதிகமானோர் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) ரஷ்யாவின் சாத்தியமான தடுப்பு மருந்து குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு மருந்தின் சமீபத்திய நிலை

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஒரு கோவிட் -19 தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நம்புகிறார்கள், இது “வைரஸுக்கு எதிரான இரட்டை பாதுகாப்பை வழங்குகிறது என்றும், நீண்டகால பாதுகாப்புக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து கோவிட் -19 க்கு எதிராக நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்பதை “மிகவும் நம்பிக்கைக்குரியது” என்று இன்னும் நிரூபிக்கவில்லை. ஆனால் இன்றைய தடுப்பு மருந்து உருவாக்கும் உலகளாவிய போட்டியில் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மனித சோதனைகள்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா 1.95 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, இது டிசம்பரில் 100 மில்லியன் டோஸ் வழங்க வழிவகுக்கும். மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் ஜெர்மன் பயோடெக் நிறுவனமான பயோஎன்டெக் ஆகியவை அவர்கள் உருவாக்கி வரும் தடுப்பு மருந்துக்கும் USA பணம் வழங்கும். ஆனால், அவை சரியான செயல்படும் முடிவுகளைக் காட்டினால் மட்டுமே வழங்கப்படும்.

டொனால்ட் ட்ரம்பின் ஆப்ரேஷன் வார்ப் ஸ்பீட் திட்டத்தின் கீழ் சாத்தியமான தடுப்பு மருந்துக்கு செலவிட அமெரிக்கா இதுவரை ஒப்புக் கொண்ட ஒப்பந்தமே இந்த ஒப்பந்தமாகும். ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகியவை இந்த மாதத்தில் பெரிய அளவிலான சோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆவற்றின் ஆரம்பக் கட்ட சரியாக இருந்ததைத் தொடர்ந்து அவை “ஒளிவிளக்கு திட்டங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. ஆரோக்கியமான பங்கேற்பாளர்களின் ஒரு சிறிய குழுவில் இம்மருந்து பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து, அமெரிக்க தடுப்பு மருந்து சோதனைகள் நம்பிக்கைக்குரியதாகி வருகிறது.

சீன மருந்து நிறுவனம் பெற்ற பாசிடிவ் முடிவுகள்

ஜூன் 17 அன்று, ஒரு சீன மருந்து நிறுவனம் ஒரு தடுப்பு மருந்தின் ஆரம்பகட்ட பாசிடிவ் முடிவுகளை அறிவித்துள்ளது. இது மருந்து வழங்கப்பட்டவர்களில் 100 சதவீதத்தினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாகக் கூறியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை சீனா நேஷனல் பயோடெக் குழுமம் (சி.என்.பி.ஜி) உருவாக்கி வருகிறது. மேலும் இந்த நோய்க்கு எதிராக ஒரு சிறந்த தடுப்பு மருந்தை உருவாக்கும் பந்தயத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட மருந்துகளில் முன்னணியில் உள்ளது. சீன பயோடெக் நிறுவனம், சினோவாக்கும், அதன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு சாதகமான முடிவுகளை அறிவித்துள்ளது. விரைவில் பிரேசிலில் பெரிய அளவிலான மூன்றாம் கட்ட சோதனைகளை தொடங்க உள்ளதாக இந்த நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது.

Thank you: Telegraph