புதுடெல்லி: இந்திய அரசு, அவசரகால அனுமதியளித்தால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா இணைந்து தயாரித்த கோவிட்-19 தடுப்பு மருந்து இந்தாண்டு டிசம்பர் மாதத்திலேயோ அல்லது அடுத்தாண்டு ஜனவரியிலேயோ பயன்பாட்டிற்கு வரும் என்றுள்ளார் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா.
மேலும், சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்து, அடுத்தாண்டின் இரண்டாம் அல்லது மூன்றாவது காலாண்டில் 100 மில்லியன் டோஸ் அளவிற்கு பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நாம் நெருக்கடி கால உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், எங்களின் பரிசோதனைகள் இந்தாண்டு டிசம்பரில் முடிவடைய வேண்டும். இதனையடுத்து, அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும்.
‍அதேசமயம், பிரிட்டனில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அந்தப் பரிசோதனையும் முடிவடையும் தருவாயில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.