அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன்

ரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.    இதுவரை சுமார் 2.10 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு இதில் 7.53 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  அமெரிக்காவில் மட்டும் 54.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுமார் 1.71 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் ரஷ்யா கடைசிக் கட்ட சோதனைகள் முடியும் முன்னரே கொரோனா தடுப்பூசி மருந்துக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட சோதனையில் உள்ள இந்த மருந்து இதுவரை பல்லாயிரக்கணக்கான தன்னார்வு தொண்டர்களுக்குச் செலுத்தப்பட்டு வெற்றி அடைந்துள்ளதாக ரஷ்யா கூறி உள்ளது.  இது  குறித்து அமெரிக்கத் தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபாசி தாம் சந்தேகம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கச் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியது.  அந்த கூட்டத்தில் அக்குழுவின் மூத்த அதிகாரி பால் மாங்கோ, “எந்த ஒரு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்று தரமானது மற்றும் பாதுகாப்பானது என தெரியவந்தால் அந்த தடுப்பூசி அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக சுமார் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஆறு கண்டுபிடிப்புக்களுக்கு அமெரிக்கா நிதியாக அளித்துள்ளது.   இந்த மருந்துகளின் சோதனை நடைபெற்று வருகிறது.   இந்த மருந்துகள் சோதனையில் தேர்ச்சி அடைந்த பிறகு அனுமதி வழங்கப்பட்டு அரசு செலவில் இலவசமாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை அளிக்கும் மருத்துவர் மற்றும் மருத்துவமனைகளுக்கு அரசு அதற்கான பணத்தைத் திரும்பச் செலுத்தும்.   இந்த தொகை பெருமளவும் பொது மற்றும் தனியார் காப்பிட்டு நிறுவனங்கள் வழங்க உள்ளது.   ஏராளமான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இதனால் ஏற்படும் செலவை ஏற்கத் தயாராக உள்ளனர்.  வரும் 2021 ஜனவரி மாதத்துக்குள் கோடிக்கணக்கான டோஸ் மருந்துகள் வாங்கப்படும்.

தற்போதைய நிலையில் அமெரிக்கா நிதி உதவி அளித்துள்ள ஆறு மருந்துகளில் ஒன்றாவது இந்த வருட இறுதிக்குள் தயாராகிவிடும்.   வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலுக்கு முன்பு தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்துவதாக கூறுவது தவறானது.  அதற்காக நாங்கள் பாதுகாப்பு விதிகளைத் தளர்த்துவதாக வந்த தகவலும் தவறானது” எனத் தெரிவித்துள்ளார்

கார்ட்டூன் கேலரி