தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 23 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று  இன்று மேலும் 5 பேருக்கு உறுதியானதை தொடர்ந்து, பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 23-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று வரை 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசிய நாட்டிலிருந்து, சுற்றுலாப் பயணமாக தமிழகத்திற்கு வந்த 4 பேர் மற்றும் அவர்களின் சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேர், கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக தமிழக  சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இவர்கள் 5 பேரும் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்‍கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுமட்டுமின்றி தமிழகத்தில், இதுவரை  வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுப் பயணிகள் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேருக்‍கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களில் 15 ஆயிரத்து 492 பேர், தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான 890 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 757 பேருக்‍கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததாகவும், 23 பேருக்‍கு Corona வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், மேலும், 110 பேரின் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்‍கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்து உள்ளார்.