பீஜிங்

நேற்று சீனாவில் ஹுபெய் மாகாணத்தைத் தவிர வேறு எங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை

சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.  அது சீனா நாடு முழுவதும் பரவியதுடன் பல உலக நாடுகளிலும் பரவியது.   இந்த வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 1 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதுவரை 3200 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த இரு தினங்களாகச் சீனாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.  குறிப்பாகச் சீனாவில் வசிப்போர் இடையே இந்த தொற்று முழுவதுமாக காணப்படவில்லை.   நேற்று முன் தினம் 44  பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டதாகச் சீனா சுகாதாரத்துறை அறிவித்தது.   கடந்த சில தினங்களாகவே வைரஸ் தொற்று சீனாவில் குறைந்து வந்த போதிலும் தற்போது தொடர்ந்து பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 100க்கு கீழே உள்ளது.

நேற்று சீனாவில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இவர்களில் 36 பேர் வைரஸின் ஊற்றுக் கண் எனக் கூறப்படும் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  மீதமுள்ள நால்வரும் ஈரான் நாட்டில் இருந்து சீனாவுக்கு வந்தவர்கள் ஆவார்கள்.  இந்த தகவலை வெளியிட்ட சுகாதாரத் துறை சீனாவில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை குறைவது மகிழ்ச்சியை அளித்தாலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.