கோரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும்! பிரபல சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் சவால் -வீடியோ

சென்னை:

கோரோனா வைரஸ் தாக்குதலை சித்த மருத்துவத்தால் தடுக்க முடியும், மத்திய மாநில அரசுகள் உதவி செய்தால், சீனாவிற்கே சென்று இலவசமாக மருத்துவம் பார்க்க தயார் என்ற பிரபல சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம்  தெரிவித்து உள்ளார்.

கோரோனா வைரஸ் – நிமோனியா வகையைச் சேர்ந்தது என்று தெரிவித்தவர், இதை சிக்கன் குனியா, டெங்கு போன்ற நோய்களை குணப்படுத்தியதுபோல  எங்களால் குணப்படுத்த முடியும் என்றும் ஆணித்தரமாக கூறினார்.

 

உலக நாடுகளை பயமுறுத்தி வரும் கோரோனா வைரஸ் சீனாவை ஆட்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பல மாகாணங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பல நாடுகளுக்கும் கோரோனா வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த உயிர்க்கொல்லி வைரஸை அழிக்க மருந்து இல்லை என்றும், தற்போது அது பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடை பெற்று வருவதாக சீனா உள்பட பல நாடுகள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், சித்த மருத்துவம் மூலம், கோரோனா வைரஸ் தாக்குதலை அழிக்க முடியும் என்று சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த வைத்திய நிபுணரான திருதணிக்காச்சலம் தெரிவித்து உள்ளார்.

சித்தமருத்துவர் திருத்தணிக்காசலம் கூறுவது என்ன- வீடியோவை பாருங்கள்…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்  திருதணிக்காச்சலம், ஏற்கனவே தமிழகத்தில் சிக்கன் குனியா பரவியபோதும், டெங்கு காய்ச்சல் பரவியபோதும், அதை கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லாத நிலையில், சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்று தெரிவித்து, அதற்கு நிலவேம்பு கசாயமே சிறந்த மருந்து என்று, அபோதைய தமிழக அரசிடம் வலியுறுத்தியதாகவும், அதைத்தொடர்ந்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி, நிலவேம்பு கஷாயம் வழங்க ஏற்பாடு செய்தார் என்று கூறியவர், அதன்மூலம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சிக்கன்குனியா, டெங்கு போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார். இன்றுவரை நிலவேம்பு கஷாயம் மூலம் டெங்கு காய்ச்சல் குணமாக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதுபோல, இப்போ சீனாவில் யுவான் நகரில் பரவி வரும் கோரோனா வைரஸ் எனப்படும் ஒளிவட்ட வைரஸ் நோய் தாக்குதலையும் கட்டுப்படுத்த முடியும். இந்த கோரோனா வைரஸ் என்பது புதிய வைரஸ் அல்ல; இதுபோல பல வைரஸ்கள் உலகை பயமுறுத்தி வருகிறது. கோரோனா வைரஸ் என்பது விலங்குகளில் இருந்து பரவுகிறது என்று தெரிவித்தவர்,  இந்த வைரஸ் நிமோனியா வகையைச் சேர்ந்தது என்று தெரிவித்தார்.

இந்த வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் காய்ச்சல் சற்று வித்தியாசனமானது என்று தெரிவித்தவர், இதை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார். இந்த நோயை குணப்படுத்த சீனா உள்பட உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் எங்களுக்கு அழைப்பு விடுத்தால், எங்களது மருத்துவர்கள் குழு அங்கு சென்று இலவசமாக சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறது என்று கூறினார்.