கொரோனா வைரஸ் ஆயுட்காலம் : புதிய அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்

கொரோனா வைரஸ் காற்றில் மணிக்கணக்கிலும் தரைப் பகுதிகளில் நாட்கணக்கிலும் உயிர் வாழும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.   உலகின் பல நாடுகளிலும் இந்த வைரஸ் குறித்து பல புதிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.  அவ்வகையில் அமெரிக்கத் தேசிய சுகாதார கல்வி நிலையத்தின் அங்கமான தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய் கல்வி நிலையம் ஒரு புதிய ஆய்வை நடத்தி  உள்ளது.

இந்த ஆய்வுக்காக இந்த நிலையம் ஒரு புதிய மைக்ராஸ்கோப்பை கண்டு பிடித்துள்ளது.  அதன் மூலம் பார்த்த போது கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் இருமும் போதும் தும்மும் போதும் ஏராளமான வைரஸ்கள் தரையில் விழுவதும் காற்றில் பரவுவதும் கண்டறியப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்டவர்கள் தொடும் இடங்களில் எல்லாமும் வைரஸ் இருந்துள்ளன.

இவ்வாறு காற்றில் பரவும் வைரஸ்கள் பல மணி நேரம் உயிருடன் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.  அது மட்டுமின்றி தரையில் இருக்கும் வைரஸ்கள் நாள் கணக்கிலும் உயிருடன் உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.   பிளாஸ்டிக், ஸ்டீல் ஆகிய பொருட்களில்  இந்த வைரஸ்கள் மூன்று நாட்களுக்கு பிறகும் உயிருடன் இருந்துள்ளன.  செம்பு உலோகத்தில் விழுந்த வைரஸ்கள் 4 மணி நேரத்தில் செயலிழந்துள்ளன.

இந்த தகவல் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.