வுஹான்: சமீபத்தில் சீனாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 100 பேரை பலி வாங்கியுள்ளது. சீன அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே வுஹான் நகரில் 1000 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை ஆறே நாட்களில் உருவாக்க உள்ளது.

சீனாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட 800 க்கும் அதிகமானோரில் கிட்டத்தட்ட 100 பேர்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளனர்.

சுமார் 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட வுஹானில் இந்த வைரஸ் வெடிப்பு தொடங்கியது.  அங்குள்ள மருத்துவமனைகள் இந்த வைரஸின் தாக்குதலுக்கு ஆளானோர்களால் நிரம்பி வழிகின்றன.  அங்குள்ள மருந்தகங்களில் மருந்துகள் தீர்ந்து விட்டன.

இந்த சவாலை எதிர்கொள்வதற்காகவே வுஹான் நகரில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையைக் கட்ட முடிவெடுத்திருக்கிறது சீன அரசு. மேலும், கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டதை அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால் ஆறே நாட்களில் இந்த மருத்துவமனையைக் கட்டி எழுப்புவதன் சாத்தியம் குறித்து கேட்ட போது, “சீனா ஏற்கெனவே இது போன்ற கட்டுமானப் பணிகளை மிகக் குறைந்த காலத்தில் செய்து முடித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் 2003 ம் ஆண்டு பெய்ஜிங்கில் கட்டப்பட்ட மருத்துவமனை ஏழு நாட்களில் கட்டப்பட்டது என்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்த கவுன்சிலின் உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மூத்த உறுப்பினரான யான்ஷோங் ஹுவாங் தெரிவித்தார்.

மேலும் அவர், “சீனா இம்மாதிரி பொறியியல் பணியில் சிறந்து விளங்குவதாகவும் இந்தக் கட்டுமானத்தை சரியான நேரத்தில் முடிக்க நாடு முழுவதும் இருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றம் தெரிவித்தார்.