தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை: ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை என்றும், பழைய மாதிரியே அது உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில், வேறுபல இடங்களைப்போல், கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதா? எனக் கண்டறிய, 20 மாதிரிகளை, பெங்களூருவில் உள்ள ‘இன்ஸ்டன்’ என்ற நிறுவனத்திற்கு, தமிழக சுகாதாரத் துறை அனுப்பியது. அதில், கொரோனா வைரஸ் உருமாறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது, “உலகின் பல்வேறு நாடுகளில், கொரோனா வைரஸ் உருமாறியுள்ளது. தமிழகத்திலும் உருமாறியுள்ளதா எனக் கண்டறிவதற்காக 20 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அந்த மாதிரிகளில் வைரஸ் உருமாறவில்லை. ஏற்கனவே உள்ள வைரஸின் தன்மைதான் உள்ளது என்று தெரியவந்தது.

எந்தவொரு வைரஸாக இருந்தாலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே தொற்று பரவும் வேகத்தை குறைக்க முடியும்” என்றுள்ளார் அவர்.