கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 கோடைக்காலத்தில் உருவானது : சீனாவின் புதிய அறிவிப்பு

பீஜிங்

கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் வருடம் கோடைக்காலத்தில் இந்தியாவில் உருவானதாகச் சீன ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் உள்ள வுகான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது.    இந்த வைரஸ் வேகமாகச் சீனா முழுவதும் பரவி தற்போது உலகெங்கும் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.  இதுவரை 63 கோடி பேருக்கு மேல் பரவிய இந்த வைரஸ் 14.65 லட்சம் பேரை பலி வாங்கி உள்ளது.  இதற்காகச் சீனாவைப் பல உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் சீன ஆய்வாளர்கள் இந்த வைரஸ் தங்கள் நாட்டில் உருவானது அல்ல எனத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  இதுவரை இந்த வைரஸ் உருவானதாக எட்டு நாடுகள் மீது பழி சுமத்தி உள்ளனர்.  வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா,இத்தாலி, செக் குடியரசு, ரஷ்யா அல்லது செர்பியா ஆகிய நாடுகளுடன் தற்போது இந்தியாவைக் குறை கூறி உள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர்கள்,”கொரோனா உருவான இடத்தை கண்டறிய நாங்கள் மரபணு ஆய்வை நடத்தி உள்ளோம்.  இதன் மூலம் இண்டஹ் வைரஸ் பரவி, மேலும் உருவாகி வருவதை மரபணு மூலம் ஆய்வு நடத்தியதில் இது வுகான் நகரில் உருவாகவில்லை என்பதும் இது இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் கோடைக்காலத்தில் உருவாகி உள்ளது” எனவும் தெரிவித்துள்ளனர்.

அந்த கோடைக் காலத்தில் இந்தியாவில் கடும் நீர் பஞ்சம் நிலவியதால் குரங்குகள் போன்ற விலங்குகள் இடையே கடும் சண்டை உண்டானதாகவும் சொல்லப்பட்டுள்ளது.  எனவே இதைக் கட்டுப்படுத்த சென்ற மனிதர்கள் மூலம் கொரோனா உற்பத்தி ஆகி இருக்கலாம் எனவும் ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் தொடர்பாக இருந்து வரும் மோதல் காரணம் எனக் கூறப்படுகிறது.  மேலும் இந்த குற்றச்சட்டை பல விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.   இந்த ஆய்வாளர்கள் கருத்து வேண்டுமென்றே உண்மையை திரித்துக் கூறுவதாக கிளஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர் டேவிட் ராபர்ட்சன் கூறி உள்ளார்.