தமிழ்நாட்டில்  சென்னையில் ஐந்து வெவ்வேறு கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் மரபணுவான ஆர்என்ஏ  இருப்பதை கண்டறிந்துள்ளனர். மே மாதம் 8 தேதி நிலவரப்படி  6009 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து வெவ்வேறு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து முதற்கட்ட சோதனையை நடத்தியதில், இந்தக் கழிவு நீரில் கொரோனாவின் ஆர்என்ஏ மரபணு கலந்திருப்பது கண்டறியப்பட்டதில் இது உறுதியானது. ஆர்என்ஏ என்பது கொரோனா வைரஸின் மரபணு ஆகும்.
“சோதனையில் வைரஸின் இருப்பு கண்டறியப்பட்டுள்ள கழிவு நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகள், அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளுடன் தொடர்புடையதாக இருப்பதை நம்மிடம் உள்ள தகவல்கள் மூலம் உறுதி செய்துள்ளோம். எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை” என்று அதிகாரிகள் கூறினார்.
“உலகளவில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள பல ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் மனித கழிவுகளில் வெளியேறும் தன்மைக் கொண்டது என்பதை ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே தான் நாம் கழிவு நீரில் வைரஸின் இருப்பைக் காண்கிறோம்” என்று டிபிஎச் டாக்டர் கொழந்தைசாமி விளக்கினார். ஏப்ரல் 23 தேதியிட்ட WHO – ன் அறிக்கையின்படி கழிவுநீர் வழியாக கொரோனா பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸ் இருப்பதற்கான  ஆதாரம் கிடைத்துள்ளதால், கழிவு நீர் மேலாண்மையை நன்கு நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் (சி.டி.சி) COVID-19 கழிவு நீர் மூலம் பரவும் அபாயத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கழிவுநீர் மேலாண்மையை முறையாக செய்யவேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளது.
தமிழில்: லயா