இந்தியாவில் புயல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 95,735 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால், தற்போதுதான் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளது, தினசரி பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை  பார்க்கும்போது தெரிய வருகிறது. மேலும், உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவ நிபுணர்கள், இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாகவும், இது அக்டோபர் மாதம் உச்சம் அடையும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 90ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், இன்று  இமாலய அளவிலான  பாதிப்பு அறியப்பட்டுள்ளது.  இதனால், கொரோனா பாதிக்கப்பட் டோர் மொத்த எண்ணிக்கை 44,62,965 ஆக உயர்ந்துள்ளது. 

கடநத 24 மணி நேரத்தில் 1,112பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந் தோர் மொத்த எண்ணிக்கை  75,062  ஆக உயர்ந்துள்ளது.

நேற்றுமட்டும் 73,057 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தோர்  மொத்த எண்ணிக்கை 34,71,784 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 9,19,018 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது உலக அளவிலான தொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை,  77.7 சதவீதமாக உயர்ந்து வருகிறது. மேலும், சோதனை அதிகமாக செய்யப்படு வதால், தொற்று பாதப்பு அதிகமாக தெரிவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ஆனால், கடந்த 15 நாட்களாகவே, தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 20ந்தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பு 7 லட்சமாக இருந்து வந்த நிலையில், அடுத்த 15 நாட்களில் தொற்றின் வேகம் இருமடங்காகி உள்ளது, தினசரி அறிவிக்கப்படும் தொற்று பாதிப்பு பட்டியல் மூலம் தெரிய வருகிறது.

ஜூலை மாதத்தின் இரண்டாவது பாதியில் கொரோனா பரவலின் வேகம் உச்சத்தில் இருந்தது. பின்னர் சற்று குறைந்து வந்த நிலையில், ஆகஸ்டு இறுதி வாரம் முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலயில், செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே பாதிப்பு உச்சம் அடைந்து வருகிறது. தினசரி 70ஆயிரம் அளவிலேயே தொற்று பரவிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும்  மேலும் தீவிரமடைந்து தற்போது நாள் ஒன்றுக்கு 95 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் தொற்று பாதிப்பு அமெரிக்காவை போல நாள் ஒன்றுக்கு 1 லட்சமாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தினசரி பாதிப்பில், தமிழகம், மகாராஷ்டிரா உள்பட குறிப்பிட்ட 10 மாநிலங்களில்தான் தொற்று பாதிப்பின் வேகம் அதிகம் உள்ளதாகவும்,  நாட்டின் மொத்த பாதிப்பில் சுமார் 80சதவிகித பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்தியஅரசு தளர்வுகள் அறிக்க தொடங்கியது முதலே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு மக்களின் பொறுப்பின்மையும் ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும், தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தங்களது தீவிர தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டதே காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.