Random image

கொரோனா வைரஸ்: ஐவர்மெக்டின் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது?

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு (anti-Parasite) மருந்து கோவிட்-19  மற்றும் மேலும் பல வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதை ஆய்வக பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மனித ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஐவரிமெக்டின் மருந்தின் மூலம் இந்த ஆய்வுகளில் ஒரு முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், தற்போதைய தனித்துவமான கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிய தீவிர ஆய்வில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த ஐவரிமெக்டின் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட, ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து ஆகும். மேலும் இது எச்.ஐ.வி, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவற்றுக்கான சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இது கோவிட் -19 க்கு எதிரான சிகிச்சையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி இன்ஸ்டிடியூட் (பி.டி.ஐ) மற்றும் பீட்டர் டோஹெர்டி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபெக்ஷன் அண்ட் இம்யூனிட்டி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவின் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள், ஐவர்மெக்டின் மருந்தை அடிப்படையாகக் கொண்டு  ஒரு கோவிட் -19 தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்க முடியும் என்று காட்டியுள்ளது. பிற வைரகளில் மிகத்திறமையாக செயல்படுவதாகவும், இது கொரோனா வைரஸுக்கு எதிராகவும் பலனளிக்கும் என்றும், மேலும் மனித சோதனைகள் செய்ய வேண்டியுள்ளதாகும் அறிவித்துள்ளனர்.

ஐவர்மெக்டின் என்றால் என்ன, எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

ஐவர்மெக்டின் மருந்து முதன்முதலில் 1975 இல் உருவாக்கப்பட்டு, 1981 இல் மருத்துவ பயன்பாட்டிற்கு வந்தது. இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது. இது தற்போது ஸ்ட்ராங்கைலோயிடியாசிஸ் என்ற நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.  ஸ்ட்ராங்கைலோயிடியாசிஸ் என்பது, Round Worms என ஆங்கிலத்திலும், உருளைப் புழுக்கள் என தமிழும் அழைக்கப்படும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய் ஆகும். மனிதர்களின் குடலில் வாழும் இந்த ஒட்டுண்ணிகள், இது உலகெங்கிலும் 30 மில்லியன் முதல் 100 மில்லியன் மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் நோயாகவும் உள்ளது.

இதே ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஆன்கோசெர்சியாசிஸ் அல்லது நதி குருட்டுத்தன்மை நோயின் அறிகுறிகளான கடுமையான அரிப்பு, சருமத்தின் கீழ் புடைப்புகள் மற்றும் குருட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கவும் இந்த ஐவர்மெக்டின் பயன்படுகிறது. நதி குருட்டுத்தன்மை என்பது Onchocerca volvulus  என்ற உருளைப் புழுக்களை போன்றதொரு ஒட்டுண்ணியால் ஏற்படும், உலக அளவில் குருட்டுத்தன்மையை உண்டாக்க கூடிய இரண்டாவது நோய் காரணம் ஆகும். இந்த ஒட்டுண்ணியை பரப்பக் கூடிய ஒரு வகை ஈக்கள் அதிக அளவில் ஓடும் நீரில் வளரக் கூடியது என்பதால் இது நதி குருட்டுத் தன்மை என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்க்கு தடுப்பூசிகள் ஏதுமில்லாத நிலையில் ஐவர்மெக்டின் ஒரு சிகிச்சையாக அல்லாமல், முழுமையாக வளர்ச்சியடையாத, கூட்டுப்புழு நிலையில் இருக்கும் போது இந்த புழுக்களை கொள்ளும் தன்மை பெற்றிருப்பதால், ஒரு பரவல் கட்டுப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. இது 6 முதல் 12 மாதங்களுக்கு ஒரு முறை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், உலகளவில் உருளைப் புழுக்கள் மற்றும் சவுக்கை புழுக்களால் ஏற்படும் தலை பேன்கள், சிரங்கு மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஐவர்மெக்டின் பயன்படுத்தப்படுகிறது. இது Ivexterm, Ivergot, Dermoper IV, Detebencil, Evanix, Iver P மற்றும் Ivertal உள்ளிட்ட வணிகப் பெயர்களில் சந்தையில் கிடைக்கிறது. இது சொட்டு மருந்துகள், கிரீம்கள் மற்றும் ஊசி மருந்துகளாக தயாரிக்கப்படுகிறது என்றாலும், மாத்திரை வடிவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மனித சோதனைகள்

கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் இது பயனுள்ளதா என்பதைப் இன்னும் மேலும் பல சோதனைகளின் மூலமே அறிய முடியும் என மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் கைலி வாக்ஸ்டாஃப் கடந்த வியாழன் அன்று பத்திரிக்கைகளுக்கு கூறும்போது, “ஒரே ஒரு டோஸ் மருந்து அனைத்து வைரஸ் மரபணுவான ஆர்.என்.ஏவையும் 48 மணிநேரத்திற்குள் அகற்றுகிறது என்பதையும், முதல் 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வைரஸ் கட்டுப்படுதப்பட்டு இருந்ததையும் கண்டறிந்துள்ளோம்.” என்றார்.

டாக்டர் வாக்ஸ்டாஃப் தன்னுடைய சோதனைகள் இன்விட்ரோ எனப்படும் ஆய்வக சோதனைகள் என்றும், கோவிட் -19 க்கு எதிராக இந்த மருந்து உண்மையிலேயே பயனுள்ளதா என்பதைப் பார்க்க மனிதர்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறி முடித்துள்ளார்.

தமிழில்: லயா