வெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை

ன்பம்மா… 48 வயதான திருநங்கை. பெரியமேடு பகுதியில் தனது வீட்டினருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் பூசாரி. அக்கம்பக்கத்தினர் எல்லோராலும் மிக மரியதையுடன் நடத்தப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நாளிலிருந்து அனைத்துமே மாறிவிட்டன.

“ஏபரல் 39-ம் தேதி சில ஆபீசருங்க வந்தாங்க. இந்த ஏரியா கொரோனா பரவியிருக்கதால என்னை யும் டெஸ்ட் பண்ணிக்க சொன்னாங்க. எனக்கு இருமல், சளி, காய்ச்சல், தலைவலி எதுமே இல்ல. இருந்தாலும் அவங்க சொன்னதால டெஸ்ட் பண்ணிக்கிட்டேன். மே 1-ம் தேதி போன் பண்ணி எனக்கு கொரோனானு சொன்னாங்க. தூக்கிவாரி போட்டது எனக்கு. ரொம்ப பயமாகிடிச்சி” என்று விவரிக்கிறார்.

தொடர்ந்து ஆம்புலன்ஸில் ராஜீவ் காந்தி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட இவருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான உணவு அளிக்கப்பட்டு, டாக்டர் மற்றும் நர்ஸ்களின் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

“நல்லா கவனிச்சுக்கிட்டாங்க தினமும். அடிக்கடி டெஸ்ட் எடுத்தாங்க. காலைல மூலிகை மருந்தும், சாயங்காலம் இச்சி, மஞ்சள் கலந்த தண்ணியும் குடிக்க குடுத்தாங்க. மே 10-ம் தேதி எனக்கு சரியாகிடிச்சு. வீட்டுக்கு போகலாம். ஆனா பத்து நாளைக்கி வீட்டை விட்டு வெளிய வரவே கூடாது. கைகளை சுத்தமா வெச்சுக்கணும். எப்போதும் மாஸ்க் போட்டுக்கணும்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க” என்ற இவருக்கு இதன் பிறகுதான் பிரச்னைகளே ஆரம்பமாகியுள்ளன.

“எல்லாரும் என் மேல் அவ்ளோ அன்பா இருப்பாங்க. தெனமும் இந்த ஏரியாக்காரங்க தான் எனக்கு சாப்பாடே தருவாங்க. ஆனா இப்போ எல்லாருமே என்னைய ஒதுக்கி வெச்சுட்டாங்க. என் தம்பி பூ மார்கெட்ல லோடு மேன். தெனமும் சாப்பாடை கொண்டு வந்து வெளிலயே வெச்சிட்டு போயிடறான். எங்க சங்கத்திலருந்து மளிகை சாமான்கள் குடுத்திட்டு இருந்தாங்க. இப்போ அதும் வரதில்ல. கோவில் திறந்திருந்தா காணிக்கை வரும். பிரசாதம் செய்வேன். சாப்பாட்டு பிரச்னையே இருந்ததில்ல. ஆனா இப்போ யாராவது மளிகை சாமானாவது தந்து உதவ மாட்டாங்களானு இருக்கு” என்கிறார் கண்ணீருடன்.

அனைவராலும் அன்புடன் நடத்தப்பட்ட அன்பம்மா, தற்போது இவ்வாறு ஒதுக்கி வைக்கப்படுவது சித்ரவதையாக உள்ளது என்றும், குணமாகி வந்த பிறகு யாரும் பேசுவது கூட இல்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார். கொரானா பாதிப்பிலிருந்து மீண்டு வருவோரை புறக்கணிக்காமல் சக மனிதராக நடத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பதையும் வலியுறுத்துகிறார்..

– லட்சுமி பிரியா