எங்கெங்கு காணினும் பச்சை.. பச்சை..  அசத்தும் வட கிழக்கு மாநிலங்கள்.

தமிழ்நாட்டில் ’ஒண்ணே ஒண்ணு ..கண்ணே கண்ணு ’ எனக் கிருஷ்ணகிரி மட்டும் பச்சை நிற  மாவட்டமாக இருந்தது.

மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பிக்கும் நேரத்தில் அதுவும் ஆரஞ்சு வண்ணம் பூசிக்கொண்டது.

நம்மைப் பொறாமை கொள்ளச்செய்யும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் என்று அழைக்கப்படும், அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் எங்கெங்கு காணினும் பச்சை மண்டலங்களாகக் காட்சி அளிக்கின்றன.

அந்த 8 மாநிலங்களும் ஒன்றாகப் பிறந்த உடன்பிறப்புகள் மாதிரி, கலாச்சார ஒற்றுமை கொண்டவை.

அங்கு மொத்தமுள்ள 117 மாவட்டங்களில் ஒரே ஒரு மாவட்டம் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் உள்ளது.

அது, திரிபுரா மாநிலத்தில் உள்ள  தலாய் மாவட்டம் ஆகும்.

மேகாலயா மாநிலத்தில் ஒரு மாவட்டமும், அசாம் மாநிலத்தில் 4 மாவட்டங்களும் ஆரஞ்சு நிற மண்டலங்களாக உள்ளன.

எஞ்சிய அத்தனை மாவட்டங்களும், பச்சை மாவட்டங்கள்.

இதனால் மூன்றாம் கட்ட ஊரடங்கில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குத் தாராளமாகவே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள 8 மாநிலங்களிலும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இயங்க  ஆரம்பித்து விட்டன.

முழு இயல்பு நிலை என்று சொல்லலாம்.

சரக்கு கடைகளைப் பற்றிக் குறிப்பிட்டால் தானே முழு இயல்பா? அரை இயல்பா? என்பது தெரியவரும்.

அசாமும், மேகாலயாவும் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடியும் முன்பே சரக்கு கடைகளைத் திறந்து விட்டன.

எஞ்சிய மாநிலங்கள் திங்கள் கிழமை மதுபான கடைகளைத் திறந்துள்ளன.

–   ஏழுமலை வெங்கடேசன்