அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் பலி: ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் உயிரிழந்து வருவதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைகள் வழியாக டிசம்பர் 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 6.7 சதவீதம் அதிகமாகும்.

கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் பலியாகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியும், டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் மட்டும் 32 லட்சம் பேர் பயணித்துள்ளனர். அதன் மூலம் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக  அதிகாரிகள் கூறுகின்றனர்.