கொரோனா வைரஸ் பரவலுக்கு பலரும் உலகமயமாக்கலை குற்றம் சாட்டிவருகிரார்கள். மேலும் இதுபோன்ற தீவிர பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி உலக மயமாக்கலை தடுத்தல், எல்லைகளில் சுவர் எழுப்புதல், பயணங்களை கட்டுப்படுத்துதல், வர்த்தகங்களைகுறைத்தல் என பல வலைகளைக் கூறி வருகின்றனர். இருப்பினும், ஒரு பகுதிக்குள் பரவும் தொற்றுநோயைத் தடுக்க குறுகிய கால தனிமைப்படுத்தல் அவசியம். ஆனால், தீவிர பரவலுக்கு எதிரான நீண்டகால தனிமைப்படுத்தல் தொற்று நோய்களுக்கு எதிராக உண்மையான பாதுகாப்பை வழங்காமல் ஒரு பெரும் பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும். அதாவது, விளைவு நேர் எதிரானது. தீவிர தொற்று நோய்க்கான உண்மையான மருந்தானது பிரித்தல் அல்ல: ஒத்துழைப்பு.

தற்போதைய உலகமயமாக்கல் யுகம் துவங்குவதற்கு முன்பே தொற்றுநோய்கள் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றுள்ளன. 14 ஆம் நூற்றாண்டில் விமானங்களும், பயணக் கப்பல்களும் இல்லாத சூழ்நிலையிலும் “பிளாக் டெத்” என்று அழைக்கப்பட்டு பிளேக் நோய் பரவல் கிழக்கு ஆசியாவிலிருந்து மேற்கு ஐரோப்பா வரை பரவி கிட்டத்தட்ட200 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது. இது ஐரோப்பிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% ஆகும். குறிப்பாக இங்கிலாந்தில், பத்தில் நான்கு பேர் இறந்தனர். புளோரன்ஸ் நகரம் அதன் 100,000 மக்களில் 50,000 பேரை இழந்தது.

மார்ச் 1520 இல், “பிரான்சிஸ்கோ டி எகுனா“ ஒற்றை பெரியம்மை கேரியர் (Carrier) – – மெக்சிகோவில் தரையிறங்கினார். அந்த நேரத்தில், மத்திய அமெரிக்காவில் ரயில்கள், பேருந்துகள் ஏன், கழுதைகள் கூட இல்லை. ஆயினும் டிசம்பர் மாதத்திற்குள் அந்த பெரியம்மை தொற்றுநோய் மத்திய அமெரிக்கா முழுவதையும் பேரழிவிற்கு உட்படுத்தியது. ஆவணப்படுத்தப்பட்ட கணக்கீடுகளின்படி, அதன் மொத்த மக்கள் தொகையில் மக்கள் மூன்றில் ஒரு பகுதியினர் வரை கொல்லப்பட்டனர்.

1918 ஆம் ஆண்டில், குறிப்பாக கடுமையான காய்ச்சலை பரப்பும் கிருமியால் பரவிய காய்ச்சல் சில மாதங்களுக்குள் உலகின் தொலைதூர மூலைகளுக்கு பரவி அரை பில்லியன் மக்களை பாதித்தது –அது, மனித இனத்தின் கால் பகுதிக்கும் அதிகமானோர் ஆவர். இந்தியாவில் அதன் மக்கள் தொகையில் 5% பேரும், டஹிடி தீவில் 14% பெரும் இறந்தனர். சமோவாவில் இறந்தவர்கள்20% பேர் ஆவர். ஒட்டு மொத்தமாக தொற்றுநோய் ஒரு வருடத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது – எண்ணிக்கையில் 100 மில்லியனாக இருக்கலாம். இது முதல் உலகப்போரின் நான்கு ஆண்டுகளில்  கொல்லப்பட்டவர்களை விட அதிகம் ஆகும்.

1918 ஆம் ஆண்டு முதல் கடந்து வந்த நூற்றாண்டில், வளர்ந்து வரும் மக்கள் தொகை, போக்குவரத்து ஆகியவற்றின் காரணமாக மனிதகுலம் தொற்று நோய்களுக்கு மேலும் பாதிக்கப்படக் கூடியதாக மாறியது. டோக்கியோ அல்லது மெக்ஸிகோ சிட்டி போன்ற ஒரு நவீன பெருநகரங்கள் புளோரன்ஸ்-ஐ விட நோய்க்கிருமிகள் வேட்டையாட சிறப்பான வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் உலக போக்குவரத்து இன்று 1918 ஐ விட மிக பல மடங்கு வேகமாக வளர்ந்துள்ளதால, ஒரு வைரஸ் பாரிஸிலிருந்து டோக்கியோ மற்றும் மெக்ஸிகோ நகரத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சென்றுவிடமுடியும் . ஆகவே, நாம் எப்பொழுதும் ஒரு தொற்றுநோய் உருவாக்க வாய்ப்புள்ள நரகத்தில் வாழ்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், தொற்றுநோய் பரவல் மற்றும் தாக்கம் இரண்டும் உண்மையில் வியத்தகு முறையில் குறைந்துவிட்டன. எய்ட்ஸ் மற்றும் எபோலா போன்ற கொடூரமான பரவல்கள் சில சமயங்களில் இருந்தபோதிலும், இருபத்தியோராம் நூற்றாண்டில் தொற்றுநோய்கள் சார்ந்த மரணங்கள் முந்தைய எந்த நேரத்தையும் விட மிகக் குறைந்த விகிதத்திலேயே நிகழ்கின்றன. ஏனென்றால், நோய்க்கிருமிகளுக்கு எதிராக மனிதர்களிடம் இருக்கும் சிறந்த பாதுகாப்பு தனிமை அல்ல – அது “தகவல்”. நோய்க்கிருமிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான போராட்டத்தில் நோய்க்கிருமிகள் தற்செயலாக நடைபெறும் பிறழ்வுகளை (Mutation) நம்பியுள்ளன. அதே நேரத்தில் மருத்துவர்கள் தகவல்களை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

நோய்க்கிருமிகள் மீதான போர்

14 ஆம் நூற்றாண்டில் கறுப்பு மரணம் எனும் பிளேக் நோய் பரவல் ஏற்பட்டபோது, அதற்காணகாரணம், கையாளும் முறை, சிகிச்சைகள் என எதுவும் யாரும் அறியவில்லை.நவீன வளர்ச்சியை மனிதன் அடையும் வரை, ஒவ்வொரு நோய்களின் போதும்மனிதர்கள் பொதுவாக தாங்களின் கோபம், பேய்களின் சாபம் அல்லது மாசுப்பட்ட காற்று என்றே சந்தேகித்து வந்தனர்.பாக்டீரியா மற்றும் வைரஸ்களின்இருப்பைப் பற்றி எவரும் சந்தேகம் கூட கொண்டிருக்கவில்லை. மக்கள் தேவதூதர்களையும் தேவதைகளையும் கூடநம்பினர். ஆனால் ஒரு சொட்டு நீரில் பல ஆயிரம் மக்களைக் கொல்லக் கூடிய ஒரு படையே இருக்கலாம் என்று அவர்களால் கற்பனைக் கூட செய்ய முடியவில்லை. ஆகவே, பிளேக் அல்லது பெரியம்மை வருகையின் போது அதிகாரிகள் செய்ய நினைத்ததெல்லாம்பெரிய அளவிலான பல்வேறு கடவுள்கள் மற்றும் புனிதர்களிடம் ஜெபங்கள் மற்றும் பஜனைகளுக்கு ஏற்பாடு செய்ததே. இது உதவவில்லை என்பதோடு,உண்மையில், மக்கள் ஜெபங்களுக்காக ஒன்றுகூடியபோது, அது மேலும்நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியது.

கடந்த நூற்றாண்டின்போது, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முக்கியமாக செய்தது, தகவல்களைத் திரட்டினர் என்பதே.தொற்று நோய்களுக்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் இரண்டையும் புரிந்து கொள்ள முயன்றனர். பரிணாமக் கோட்பாடு புதிய நோய்கள் உருவாதலையும், பழைய நோய்கள் கடுமையாவதையும் தெளிவாக விளக்கியது. மரபியல் கோட்பாடுகள், ஒரு நோய்க்கிருமியின் செயல்பாட்டுமுறையை உளவு பார்க்க உதவியது. பிளேக் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அப்போதைய மக்கள் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், தற்போதைய கொரோனா வைரஸை அடையாளம் காணவும், அதன் மரபணுவை தெரிந்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண நம்பகமான சோதனையை உருவாக்கவும் விஞ்ஞானிகளுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே பிடித்தன.

தொற்று நோய்களுக்காண காரணத்தை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டவுடன், அவற்றை எதிர்த்துப் போராடுவது மிகவும் எளிதாகிவிட்டது. தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மேம்பட்ட சுகாதாரம், மிகச் சிறந்த மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மனிதகுலத்தை அதன் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை விட வலிமையானவனாக ஆக்கின. 1967 ஆம் ஆண்டில், பெரியம்மை இன்னும் 15 மில்லியன் மக்களைப் பாதித்து, அவர்களில் 2 மில்லியன் மக்களை கொன்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில், பெரியம்மை தடுப்பூசி போடுவதற்கான உலகளாவிய பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. 1979 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு மனிதநேயம் வென்றதாகவும், பெரியம்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாகவும் அறிவித்தது. 2019 ஆம் ஆண்டில் ஒரு நபர் கூட பெரியம்மை நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது கொல்லப்படவில்லை.

எல்லைப் பாதுகாப்பு

வரலாறு தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மூலம் நமக்கு கற்பிப்பது என்ன?

முதலில், உங்கள் எல்லைகளை நிரந்தரமாக மூடுவதன் மூலம் உங்களைப் பாதுகாக்க முடியாது என்பதை இது குறிக்கிறது. உலகமயமாக்கல் காலத்திற்கு முந்தையக் காலத்தில் கூடதொற்றுநோய்கள் வேகமாக பரவின என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நம்முடையத் தொடர்புகளை,1348 ஆம் ஆண்டின் இங்கிலாந்து அளவிற்கு குறைத்தாலும் – அது இன்னும் போதுமானதாக இருக்காது. தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் நம்மைப் பாதுகாக்க, நாம் முழு கற்காலம் செல்ல வேண்டும். அது நம்மால் முடியுமா?

இரண்டாவதாக, உண்மையான பாதுகாப்பு நம்பகமான விஞ்ஞான தகவல்களைப் பகிர்வதிலிருந்தும், உலகளாவிய ஒற்றுமையிலிருந்தும் வருகிறது என்பதை வரலாறு குறிக்கிறது. ஒரு நாடு ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்படுகையில், அது பொருளாதார பேரழிவுக்கு அஞ்சாமல் பரவல் பற்றிய தகவல்களை நேர்மையாக பகிர்ந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும் – அதே நேரத்தில் மற்ற நாடுகள் அந்த தகவலை நம்ப வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களைபுறக்கணிப்பதை விட உதவிககரம் நீட்ட தயாராக இருக்க வேண்டும். ஒருபாதிக்கப்பட்டவராக, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றி பல முக்கியமான படிப்பினைகளை சீனா கற்பிக்க முடியும், ஆனால் இதற்கு, சர்வதேச அளவிலான நம்பிக்கை மற்றும்ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

பயனுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை. தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க தனிமைப்படுத்தல் மற்றும் நகரங்களை முடக்குதல் அவசியம் ஆகும். ஆனால், உலகநாடுகள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொள்ளும்போது, ஒவ்வொரு நாடும் உலக அளவில் தனிப்படுத்தப்பட்டதாக உணரும் போதும், தனது சொந்த நடவடிக்கைகளையே நம்பும் போதும், அரசாங்கங்கள் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்குகின்றன. ஒரு நாடு 100 கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைகளை மட்டுமே கண்டறிந்தால், உடனடியாக முழு நகரங்களையும் பிராந்தியங்களையும் பூட்டுமா? மேலும், இது மற்ற நாடுகளிலிருந்து அந்த நாடு எதிர்பார்க்கும் உதவிகளையும் பொறுத்ததாகும். ஒரு நாட்டின் நகரங்களை பூட்டுவது என்பது பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும். பிற நாடுகள் உதவிக்கு வரும் என்று ஒரு நாடு கருதினால், இந்த அளவிலான கடுமையான நடவடிக்கையை பின்பற்ற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், மற்ற நாடுகள் கைவிடும் என்று என்னும் நிலை வருமானால், ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்று உணரும் வரை நகரங்களை முடக்க தயக்கம் கொள்ளவே செய்யும்.

இதுபோன்ற தொற்றுநோய்களைப் பற்றி மக்கள் உணர வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு நாட்டிலும் தொற்றுநோய் பரவுவது முழு மனித இனத்தினையும் முற்றிலுமாக அழிக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. வைரஸ்கள் பரிணாமம் அடைகின்றன என்பதே இதற்கு காரணம் ஆகும். கொரோனா போன்ற வைரஸ்கள் வெளவால்கள் போன்ற விலங்குகளில் உருவாகின்றன. அவை மனிதர்களிடம் பரவும் போது,​​ ஆரம்பத்தில் அவைமனித உடலுக்குள் பொருந்தாது. மனிதர்களுக்குள் மீண்டும் மீண்டும் நுழைய முயற்சிக்கும் போது வைரஸ்கள் எப்போதாவது மியூட்டேசன்களுக்கு உட்படுகின்றன. பெரும்பாலான மியூட்டேசன்கள் பாதிப்பில்லாதவை. ஆனால் ஒவ்வொரு முறையும் வைரஸ் மியூட்டேசனுக்கு உட்படும் போது மனித நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரானதாகி, தொற்று நோயாகவோ அல்லது அதிக எதிர்ப்புடையதாகவோ மாறுகிறது. வைரஸின் இந்த மியூட்டேசன் உண்டான புதிய வகை, பின்னர் மனிதர்களிடையே வேகமாக பரவுகிறது. ஒரு தனி நபருக்குள் டிரில்லியன் கணக்கான வைரஸ்கள் உருவாக முடியும் என்பதால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் மற்றொரு மனிதனுக்குள் நுழைய வைரஸ்களுக்கு டிரில்லியன் கணக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவார். அதில் ஒரே ஒரு வாய்ப்பு வெற்றி பெற்றாலும் வைரஸுக்கு மேலும் ட்ரில்லியன் கணக்கான வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும்.

இது வெறும் ஊகம் அல்ல. ரிச்சர்ட் பிரஸ்டனின் “ அபாய மண்டலத்தில் நெருக்கடி” 2014- இல் நடந்த எபோலா வைரசின் தீவிர பரவலின் சங்கிலியை துல்லியமாக விவரிக்கிறது. சில எபோலா வைரஸ்கள் வவ்வாளில் இருந்து மனிதனுக்கு பரவியபோது, நோயின் தீவிர பரவல் தொடங்கியது. இந்த வைரஸ்கள் மக்களை நோய்வாய்ப்படுத்தின என்றாலும், அவை மனித உடலை விட வெளவால்களுக்குள் வாழவே தகவமைந்திருந்தன. ஆனால், எபோலா வைரஸில் ஏற்பட்ட ஒரு மியூட்டேசன், எபோலாவை, ஒரு சாதாரண நோயிலிருந்து அதி தீவிரமான தொற்றுநோயாக மாற்றியது. மேற்கு ஆப்பிரிக்காவின் மாகோனா பகுதியில் எங்கோ ஒரு மனிதனை பாதித்த எபோலா, அதன் மியூட்டேசன் காரணமாக மனித செல்களின் கொலஸ்ட்ரால் உட்செல்லும் ரிசப்டார்களுடன் (Cholasterol Receptor) இணையும் திறனை பெற்றது. மியூட்டேசன் காரணமாக உருவான இந்த புதிய எபோலா “மாகோனா ஸ்ட்ரெய்ன்” என அழைக்கப்பட்டது. இதன் பின்னர் தான் விவகாரம் ஆரம்பமானது. எபோலா மனிதர்களை தாக்க ஆரம்பிக்க, தற்போது மனிதர்கள் கொலஸ்ட்ரால்-க்கு பதிலாக, எபோலாவை தன் செல்களுக்குள்  இழுத்துக் கொண்டிருந்தனர். இந்த புதிய மாகோனா எபோலா மனிதர்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக தொற்று நோயாக மாறியிருந்தது.

இந்த வரிகளை நீங்கள் படிக்கும்போது, தெஹ்ரான், மிலன் அல்லது வுஹானில் ஒரு கொரோனா வைரஸில் அதே போன்றதொரு மியூட்டேசன் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால், அது உண்மையில் ஈரானியர்கள்,  இத்தாலியர்கள் அல்லது சீனர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் ஏற்படும் நேரடி அச்சுறுத்தலாகும். கொரோனா வைரஸுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்று உலகெங்கிலும் உள்ள மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான தங்களது விருப்பத்தை பகிர்ந்து வருகின்றனர். நம்மை மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் நேரடி பொருள் ஆகும்.

1970 களில் மனிதர்களால் பெரியம்மை வைரஸை தோற்கடிக்க முடிந்தது, ஏனெனில் எல்லா நாடுகளிலும் உள்ள அனைவருக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்டது. ஒரு நாடு கூட அதன் மக்களுக்கு தடுப்பூசி போடத் தவறியிருந்தாலும், அது முழு மனித இனத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும், ஏனென்றால் பெரியம்மை வைரஸ் எங்காவது இருந்து உருவாகி, எங்காவது பரிணாமம் அடைந்தால், அது எப்போதும் எல்லா இடங்களிலும் மீண்டும் பரவக்கூடும்.

வைரஸ்களுக்கு எதிரான போராட்டத்தில், மனிதகுலம் எல்லைகளை நெருக்கமாக பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியமே. ஆனால் அது நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் அல்ல. மாறாக, மனித உலகத்துக்கும் வைரஸ் குலத்திற்குமான எல்லையை பாதுகாக்க வேண்டும். இந்த பூமி எண்ணற்ற வைரஸ்களை தினம் சந்திக்கிறது. மேலும் மியூட்டேசன் காரணமாக, புதிய வைரஸ்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.  இந்த வைரஸ்களை, மனித உலகத்திலிருந்து பிரிக்கும் எல்லைக்கோடு ஒவ்வொரு மனிதனின் உடலினுள் செல்கிறது. ஒரு ஆபத்தான வைரஸ் பூமியில் எங்கும் இந்த எல்லையை ஊடுருவிச் சென்றாலும், அது முழு மனித இனத்தையும் ஆபத்தில் ஆழ்த்திவிடும்.

கடந்த நூற்றாண்டில், மனித குலம் இந்த எல்லையை முன்பை விட நன்கு பலப்படுத்தியுள்ளது. அந்த எல்லையில் ஒரு சுவராக பணியாற்ற நவீன சுகாதார அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதை ரோந்து சுற்றுபவர்களாக இருந்து, ஊடுருவும் நபர்களை விரட்டும் காவலர்கலாக இருந்து வருகின்றனர். இருப்பினும், இந்த எல்லையின் பலமிக்கப் பகுதிகளின் சூட்சுமங்கள் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை சுகாதார சேவைகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இது நம் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இவை அனைத்தும் தேசிய அளவில் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க நாம் பழகியதால் வந்த விளைவுகள் ஆகும். ஆனால், ஈரானியர்களுக்கும் சீனர்களுக்கும் சிறந்த சுகாதார சேவையை வழங்குவது இஸ்ரேலியர்களையும் அமெரிக்கர்களையும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்பதை மறந்து விட வேண்டாம். இந்த எளிய உண்மை அனைவருக்கும் தெளிவாக புரியவேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது உலகின் மிக முக்கியமான தலைவர்களாலும் கூட உணரப்படவில்லைஎன்பதே உண்மை..

மார்ச் 13 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் குறித்த செய்தி மாநாட்டின் போது தேசிய அவசரநிலையை அறிவித்த பின்னர் ஜனாதிபதி டிரம்ப் மேடையில் இருந்து வெளியேறினார்.

ஒரு தலைவன் இல்லாத உலகம்

இன்று மனிதகுலம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. அது கொரோனா வைரஸ் காரணமாக மட்டுமல்ல, மனிதர்களிடையே நிலவும் நம்பிக்கையின்மையும் ஒரு காரணமாக அணிந்துள்ளது. ஒரு தொற்றுநோயைத் தோற்கடிக்க, மக்கள் அறிவியல் விஞ்ஞானிகளை, மருத்துவ  நிபுணர்களையும், பொது மக்கள் தங்களுக்காக பணிபுரியும் அதிகாரிகளையும், உலக நாடுகள் ஒருவருக்கு ஒருவரையும் நம்ப வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அறிவியலின் மீதும், அதிகாரிகள் மீதும், சர்வதேச ஒத்துழைப்பின் மீதும் இருந்த நம்பிக்கையை குலைக்கும் சூழ்நிலைகளை வேண்டுமென்றே ஏற்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, ஒருங்கிணைந்த உலகளாவிய செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், ஒழுங்கமைக்கவும், நிதியளிக்கவும் கூடிய உலகளாவிய தலைவர்களை, இந்த நெருக்கடியான நேரத்தில், அதை எதிர்கொள்ள நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

2014 எபோலா தொற்றுநோயின் போதும், 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியின் போதும் அமெரிக்கா அத்தகையதொரு தலைவராக தன்னிச்சையாக பொறுப்பேற்று  பணியாற்றி, உலகளாவிய பொருளாதாரக் இழப்பை தடுக்க போதுமான நாடுகளை அணிதிரட்டியது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா உலகளாவிய தலைவராக தனது நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கியுள்ளது. அமெரிக்க நிர்வாகம் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளுக்கான ஆதரவைக் குறைத்ததின் மூலம் தான் இனி யாருக்கும் உண்மையான நண்பர் இல்லை என்பதையும், அது தன்னலன்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது என்பதையும் உலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி முற்றியபோது அமெரிக்கா ஓரங்கட்டப்பட்டது. இந்த நெருக்கடி நிலையிலும் இதுவரை தனது முன்னணி பொறுப்பை ஏற்றுக் கொள்வதை தவிர்த்தே வருகிறது. இனி அது தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்தாலும், தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. ஒருவேளை சில நாடுகள் அதைப் பின்பற்ற தயாராக இருக்ந்தாலும், “Me First” என்ற குறிக்கோளுடன், தன்னை எல்லாவிடத்திலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு தலைவரை எவரும் பின்பற்றுவார்களா?

யு.எஸ் விட்டுச்சென்ற வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப இயலவில்லை. அதற்கு நேர்மாறாக, இனவெறி, தனிமைப்படுத்தல் மற்றும் அவநம்பிக்கை ஆகியவை இப்போது சர்வதேச அமைப்பின் பெரும்பகுதியைக் நிர்வகிக்கின்றன. நம்பிக்கையும், உலகளாவிய ஒற்றுமையும் இல்லாமல் நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க முடியாது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்று நோய்கள் மேலும் உருவாகலாம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியும் நாம் பெரும் ஒரு புதிய வாய்ப்பாகும். உலகளாவிய ஒற்றுமையின்மையால் ஏற்படும் கடுமையான ஆபத்தை மனிதகுலம் உணர, தற்போதைய கொரோனா தொற்றுநோய் உதவும் என்று நம்புகிறோம்.

ஒரு முக்கிய உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.  கொரோனா தொற்றுநோய் ஐரோப்பிய பிராந்தியத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அது இழந்த மக்கள் ஆதரவை மீண்டும் பெற. ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிர்ஷ்டசாலி உறுப்பினர்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட சக ஊழியர்களுக்கு உதவ விரைவாக, தாராளமாக பணம், உபகரணங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அனுப்பும் போது,  இது எந்தவொரு பலநூறு மேடை பேச்சுகளையும் விட சிறப்பாக மக்களிடையே அதன் மதிப்பை சென்று சேர்க்கும். அது ஐரோப்பிய நாடுகளின் மதிப்பை, வெகு சிறப்பாக நிரூபிக்கும். ஆனால், மறுபுறம், ஒவ்வொரு நாடும் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடிவெடுத்தால், இந்த தொற்றுநோய் ஐரோப்பாவை மரணத்தின் முன் மண்டியிட வைக்கும்.

நெருக்கடியின் இந்த தருணத்தில், ஒரு முக்கியமான போராட்டம் மனிதகுலத்திற்குள்ளேயே நடைபெறுகிறது. இந்த தொற்றுநோய் மனிதர்களிடையே ஒற்றுமையின்மையையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தினால், அது வைரஸின் மிகப்பெரிய வெற்றியாகும். மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது – வைரஸ்கள் இரட்டிப்பாகும். இதற்கு நேர்மாறாக, தொற்றுநோய் உலகளாவிய ஒத்துழைப்பை விளைவித்தால், அது கொரோனா வைரஸுக்கு எதிராக மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்து நோய்க்கிருமிகளுக்கும் எதிரான வெற்றியாகும்.

 

பதிப்புரிமை © யுவல் நோவா ஹராரி 2020

மூலக்கட்டுரை: யுவல் நோவா ஹராரி

தமிழில்: லயா