ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பீதி: டிஷ்யூ பேப்பர் பண்டல்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

ஹாங்காங்: ஹாங்காங் நாட்டில் கொரோனா வைரஸ் பீதி ஒரு பக்கம் இருக்க கழிவறையில் பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பர் பண்டல்களை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது.

உலகம் எங்கும் கொரோனா வைரஸ் பீதி இன்னும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் இன்னும் உயிர்பலி ஓயவில்லை. உலக நாடுகளில் இருந்து சீனா துண்டிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஹாங்காங்கில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பர் பண்டல்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.

மோங்கோக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. அங்குள்ள பல்சுவை அங்காடி முன்பு நின்றிருந்த வாகனத்தில் இருந்து டிஷ்யூ பேப்பர் பண்டல்கள் இறக்கப்பட்டு கொண்டிருந்தன.

அப்போது சில மர்ம நபர்கள் அந்த ஊழியர்களை பயங்கர ஆயுதங்களை காட்டி, மிரட்டி 600 பேப்பர் பண்டல்களை பறித்துச் சென்றிருக்கின்றனர். இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து பேப்பர் ரோல்களை மீட்டிருக்கின்றனர்.

ஹாங்காங்கில் கொரோனா தாக்கம் மற்றும் பீதி இருப்பதால் டிஷ்யூ பேப்பர்களுக்கு கடுமையான மவுசு ஏற்பட்டு உள்ளது. அதற்கான தட்டுப்பாடும் அதிகரித்த நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது.