கொரோனா வைரஸ்..  சோப்பின் அருமை இவ்வளவு இருக்கு..

ப்பெல்லாம் யாருக்கும் போன் பண்றதுக்கு பயமா இருக்கு. போன் பண்ணினாலே இருமல் சத்தத்தோட ஒரு காலர் டியூன் நம்மை பயமுறுத்துது. இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையை பயன்படுத்துங்க. உடனே சோப்பால கைகளை கழுவிடுங்கனு அறிவுரையோட.

அது ஏன் சோப்பு? சோப்புக்கு அவ்ளோ பவரா? ஆம். சோப்பு இந்த வைரஸ்களை கொல்றதுல முக்கிய பங்கு வகிக்குது.

எப்டினு பாக்குறதுக்கு முன்னால பொதுவா வைரஸ் என்பதன் அமைப்பு எப்டிங்கிற தெரிந்து கொள்வோம்.

வைரஸ் என்பது RNA, புரோட்டீன் மற்றும் லிப்பிட் என்ற மூன்று அடுக்குகளை கொண்டது. இவை மூன்றும் சேர்ந்தே ஒரு வைரஸாக உருவாகி கொள்கின்றன. ஆனாலும் இவை அவ்வளவு உறுதியான அமைப்பை பெற்றிருப்பதில்லை. இதில் லிப்பிட் என்பது தான் RNA, புரோட்டீன் இரண்டினையும் போர்த்தி ஒரு வைரஸாக உருவாக்குகிறது. இருப்பினும் இது எளிதில் உடைந்துவிடக்கூடியது தான்.

அதனாலேயே இந்த வைரஸ்களை அழிக்க ரொம்பவும் சக்தி வாய்ந்த கெமிக்கல்ஸ் எதுவும் தேவையில்ல. சாதாரண சோப்பே போதுமானது.

பொதுவா வைரஸ்கள் 50 – 200 நானோமீட்டர்களால் ஆனவை. அதனால் இவைகள் எதன் மீதாவது பட்டால் எளிதில் பரவிவிடக்கூடியதாக இருக்கின்றன. நீங்கள் தும்மினாலோ, இருமினாலோ உங்கள் வாய், மூக்கு இவற்றிலிருந்து வெளிவரும் மிக நுண்ணிய துகள்கள் வெகு எளிதாக காய்ந்துவிடும். ஆனால் அவற்றில் வாழும் வைரஸ் கிருமியானது மிகவும் உயிர்ப்புடனேயே இருக்கும். சில மணி நேரங்கள் வரை. ஏன் ஒரு நாள் முழுவதும் கூட.

இந்த வைரஸ் சாதாரணமாக வழுவழுப்பான பகுதிகளில் மற்றும் ஸ்டீல், பீங்கான், பிளாஸ்டிக் போன்றவற்றில் எளிதில் தங்குவதில்லை. ஆனால் மரம், துணி, நமது தோல் பகுதிகள் இவற்றின் வாழ்விடமாகும். அதிலும் நமது தோலில் உள்ள சொரசொரப்பான அமைப்பு இவற்றின் சொர்க்கபுரி.

நாம் நமது முகத்தை நமது கைகளால் சராசரியாக 2 – 5 நிமிடங்களுக்கு ஒரு முறை தொடுகிறோம். அடுத்தவர் தும்மல், இருமல் மூலமாக நம் கைகளில் ஒட்டிக்கொள்ளும் இந்த வைரஸ் வெகு எளிதாக நம் உடலில் பரவிவிட வாய்ப்புள்ளது. எனவே தான் அடிக்கடி நம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த வைரஸ்களை ஒருங்கிணைக்கும் லிப்பிட் என்னும் அடுக்கினை சோப்பில் உள்ள அமிலமானது வெகு எளிதாக அழித்துவிடும். அதனால் தான் கைகளை வெறும் தண்ணீரில் கழுவுவது மட்டும் போதுமானது இல்லை என்றும் சோப்பால் கைகளை நன்றாக தேய்த்து கழுவுவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

நமது வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் சோப்பை பயன்படுத்தினாலே போதுமானது. இதற்காக பிரத்யேகமான ஜெல், க்ரீம் போன்றவை அவசியமில்லை என்கிறார் ஆஸ்திரேலியாவின் சௌத் வேல்ஸ் வேதியல் பள்ளி பேராசிரியர் பால் தோடர்சன் என்பவர்.

-லட்சுமி பிரியா