2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் பகுதியில் முதன்முதலில் தனது கோரமுகத்தை வெளியுலகிற்குக் காட்டிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க 3285 பேரை பலி கொண்டதோடு அமெரிக்காவில் மட்டும் 11 பேரை இன்றுவரை பலிகொண்டிருக்கிறது.

இதுவரை 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் 95,415 பேரை பாதிப்பிற்குள்ளாக்கி இருக்கிறது கொரோனா வைரஸ்.

இதனை உலகின் சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு இதற்கு சீரான முறையில் ஆய்வுநடத்தி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது. அதன் முதல் முயற்சியாக இந்த வைரஸ் குடும்பத்தை கண்டறிந்து அதற்கு கோவிட்19 என்று கடந்த பிப் 11 ல்  பெயர்வைத்திருக்கிறார்கள்.

மூச்சு மற்றும் சுவாச கோளாறால் ஏற்படும் இந்தநோய்க்கு, சார்ஸ் நோய்க்கு காரணமான அதே வைரஸ் குடும்பத்தை சார்ந்த வைரஸ் தான் காரணம் என்பதால்  இந்த வைரசுக்கு “சார்ஸ் கோவ் 2”  என்று பெயரிட்டுள்ளனர்.

2003 ல் சார்ஸ் பாதித்த பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் அச்சமடையவோ அல்லது அதற்கு செய்த சிகிச்சை முறையையோ இதற்கும் பின்பற்றிவிட கூடாது என்பதற்காக “சார்ஸ் கோவ் 2” எனும் வைரஸ் பெயரால் அழைக்காமல்

ரூபெல்லா வைரசால் உருவாகும் அம்மை,  ஹெச்.ஐ.வி. வைரசால் உருவாகும் எய்ட்ஸ் போன்று சார்ஸ் கோவ் 2 வைரசால் உருவாகும் இந்தநோயையும் அதன் நோயை கொண்டே கொரோனா வைரஸ் நோய் (கோவிட்19) என்று அழைக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழுவில்  (ஐ.சி.டி.வி) உள்ள விஞ்ஞானிகள், வைரஸ்கள் மற்றும் நோய்களுக்கு பெயரிடுவதற்கு வெவ்வேறு செயல்முறைகள் மற்றும் நோக்கங்களை கொண்டுள்ளனர்.

சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் வளர்ச்சியை எளிதாக்குவதற்கு வைரஸ்கள் அவற்றின் மரபணு கட்டமைப்பின் அடிப்படையில் பெயரிடப்படுகிறது.

கோவிட்19 நோய்க்கு தீர்வுகாணும் உலக சுகாதார அமைப்பின்  இந்த முயற்சிக்கு பில் கேட்ஸ் பவுண்டேசன், மூடி’ஸ் உள்ளிட்ட  உலகெங்கிலும் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கைகொடுக்க முன்வந்துள்ளன.

கடந்தகாலத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றிய இந்தியா, தற்போது வுஹானில் தொடங்கி கோவை வரை வந்திருக்கும் கொரோனா வைரஸ் நோயை (கோவிட்19) கட்டுப்படுத்துவதில் உள்ள இந்தியாவின் பங்கு என்னவென்பது இனிதான் தெரிய வரும்.