கொரோனா வைரஸ்: சீனாவில் 3,136-ஐ தொட்டது உயிரிழப்பு எண்ணிக்கை

பீஜிங் :

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 136-ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது. அதன்பின்னர் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உயிரிழப்பு விகிதமும் குறைந்தது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 22 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3136 ஆக உயர்ந்துள்ளது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாக இருந்தது. நேற்று புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் 80 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கையை சீன அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கயின் படி, சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 136-ஆக அதிகரித்து உள்ளதாகவும், 80 ஆயிரத்து 750 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 59 ஆயிரம் பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து தேறி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.