கொரோனா பீதி: டெல்லியில் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

டெல்லி:

கொரோனா பாதிப்பு தொடர்பான பீதியில் ஏற்கனவே 2 பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த மார்ச் மாதம் முழுவதும் பள்ளியை மூடி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

மாநில கல்வி அமைச்சரும் துணைமுதல்வருமான மணிஷ் சிசோடியா, டெல்லியில் மார்ச் 31-ம் தேதி வரை ஆரம்பப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மக்களை பீதிக்குள்ளாகி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இங்கு இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற பள்ளி மாணவரின் தந்தை ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பல மாணவர்கள் கலந்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறந்தநாளை கொண்டாடிய நபர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி இருந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக அந்த பள்ளி மாணவர்களுக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில்,  அந்த பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது. மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பீதி காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

டெல்லியின் பல பள்ளிகள் மாணவ மாணவிகள் முகக்கவசம் அணிந்து வர வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில்,  மார்ச் 31-ம் தேதி வரை ஆரம்பப் பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு, நாளை முதல், அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து பள்ளிகளும் (5 ஆம் வகுப்பு வரை) மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் என்று துணைமுதல்வர் சிசோடியா அறிவித்து உள்ளார்.

அதுபோல கொரோனா  வைரஸ் பரவலின் எதிரொலியாக தில்லியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கும் மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

தலைநகர்  டெல்லியில் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு பதிவு செய்யபப்டுகிறது. ஆனால் ஒருவர் தனது விரல் மூலம் பதிவு செய்யும் உபகாரணத்தில், மற்றொருவர் தனது கை விரலை வைக்கும் சமயம், தற்போது கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என்று மாநில அரசு கருதுவதால் இந்த உத்தராவது பிறப்பிக்கப்பட்டுள்ளது.