சீனாவில் இருந்து கோவை வந்த 8 மாணவர்கள்: கொரோனா பீதியால் பொது இடங்களில் நடமாட தடை

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே சீனாவில் இருந்து 8 மாணவர்கள் கோவை வந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. அந்த வைரசால் இது வரை 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 3,100-க் கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே, கேரளாவில் 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நாடு முழுவதும் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந் நிலையில், கோவையைச் சேர்ந்த 8 மாணவர்கள் சீனாவில் இருந்து திங்கட்கிழமை இரவு கோவை வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை. இருப்பினும் அவர்கள் யாரும் மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் வீடுகளிலேயே இருப்பது தான் சிறந்தது என்று கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார். ஏதாவது காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அந்த 8 பேரில் 4 பேர் கோவை நகரத்தில் இருப்பிடத்தை கொண்டவர்கள். 2 பேர் அன்னூர் பகுதியையும், மற்ற 2 பேர் பொள்ளாச்சியையும் சேர்ந்தவர்கள்.

கோவை விமான நிலையம் அவர்கள் வந்த போது, முழுமையாக மருத்துவ பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்டனர். அந்த சோதனைகளில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக பொதுக்சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரமேஷ்கூறி இருக்கிறார்.

ஆனாலும், அடுத்த 28 நாட்களுக்கு அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.