டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா தொற்றுகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஆனால் சமீப காலமாக கொரோனா தொற்றின் வேகம் சரிய தொடங்கி இருக்கிறது. தினசரி 1 லட்சம் என்று இருந்த பாதிப்புகள் தற்போது குறைந்து வருகிறது. தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:  10 லட்சம் மக்கள் தொகையில் 81 பேர் என்ற அடிப்படையில் உயிரிழந்து உள்ளனர். அக்டோபர் 2ம் தேதியில் இருந்து 1,100க்கும் குறைவான உயிரிழப்புகளே பதிவாகி இருக்கின்றன.
நாட்டின் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறந்த செயல்பாடுகளால் 10 லட்சம் பேரில் உயிரிழப்பு விகிதம் என்பது குறைந்து உள்ளது. நாட்டில் உள்ள 1.52% உயிரிழப்பு விகிதம் என்பது 2020ம் ஆண்டு மார்ச் 22ம் தேதியில் இருந்து மிக குறைந்த அளவாகும் என்று தெரிவித்து உள்ளது.