ரோம்: கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், 2 மாதங்களுக்கு பின் இத்தாலியில் தற்போது, ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி ஆகும். கொரோனாவை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் இத்தாலி தான் அமல்படுத்தியது.
தற்போது, 2.11 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அவர்களில் 28,884 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆனால் 2 வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து 2 மாதங்களுக்கு பின் தற்போது, ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு உள்ளது.
ஸ்பெயினை தொடர்ந்து, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி பல நாட்களுக்கு பிறகு, மக்களை வெளியே அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. 2 மாதங்கள் கழித்து உறவினர்களை, நண்பர்களை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
உணவகங்களில் பார்சல் கிடைக்கும். மொத்த வணிகங்கள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. வீடுகளில் முடங்கியிருந்த, 40 லட்சம் பணியாளர்கள் தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர். வீட்டில் அடைபட்டிருந்த மக்கள், முகக் கவசங்கள் அணிந்த படி, வெளியில் நடமாடத் துவங்கியுள்ளனர். இது குறித்து ரோம் நகர குடியிருப்பாளர் மார்கே லோடொசி கூறியிருப்பதாவது:
ஒருபுறம், மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம், குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டிகளுடன் வெளியில், தோட்டத்தில் விளையாட உள்ளனர். அதற்காக நாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
மறுபுறம், இது திசைதிருப்பல். விதிகள் தெளிவாக இல்லை, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் 2வது மிக அதிகமான வைரஸ் இறப்புகளை கொண்ட ஒரு நாட்டில் இன்னும் சில தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்று இத்தாலிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆட்டோமொபைல் துறை மற்றும் கட்டுமானம் உட்பட பல தொழில்கள் ஏற்கனவே பணிகளை தொடங்கி உள்ளன. ஆனால் இத்தாலியின் 20 பிராந்தியங்கள் தனித்தனியாக விதிமுறைகளை விதித்துள்ளன. ஆகையால் எதை செய்வது, எதை பின்பற்றுவது என்பதில் மக்கள் சில குழப்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.