அரியானா: பஞ்சாபில் ஒரே ஒருவரால் 40000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகளவில் 200 நாடுகளில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும்  வெகு வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கி உள்ளன.

இந் நிலையில் வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல்தேவ் சிங் என்ற ஒரே ஒரு நபரால் கிட்டத்தட்ட 40000 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் தனிமைப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

70 வயதான அந்த மதபோதகர் மரணத்துக்கு பிறகே கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர் இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இருந்து இந்தியா திரும்பினார். அப்போது அவரிடம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர் இந்த அறிவுரையை புறக்கணித்ததாக தெரிகிறது.

இறப்பதற்கு சற்று முன்பு ஹோலா மொஹல்லாவின் சீக்கிய பண்டிகையை கொண்டாட சென்றிருந்தார். 6 நாள் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் 10,000 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா பாதிப்பால் அவர் இறந்ததையடுத்து, அவர் தங்கியிருந்த இடத்தை சுற்றியுள்ள 15 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை, அவருடன் நேரடி தொடர்பு கொண்ட 550 பேரை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இந்தியாவில் தோராயமாக,640 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதில் 30 பேர் பஞ்சாபில் இருந்து தான் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.