கொரோனா வைரஸ்: பயண தடைக்கு இடையே இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இத்தாலி:

த்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தோன்றி உலகில் சுமார் 100 நாடுகளை பீதிக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டில் படுவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கொரோனாவால் மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

நேற்றைய நிலவரப்படி, இந்நோயால் 5,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,247 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள இரவு விடுதிகள், திரையரங்கங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நோய் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் வடபகுதியில் உள்ள லோம்பார்டி பிராந்தியம் மற்றும் அருகாமையில் உள்ள 15 மாகாணங்களை சேர்ந்த சுமார் ஒரு கோடியே 60 லட்சம் மக்கள் வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதிவரை தங்களது வசிப்பிடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல கூடாது என இத்தாலி பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸின் அதிக தாக்கத்திற்கு உள்ளான 16 மில்லியனளவிலான மக்கள் வாழும் லொம்பார்டியா பகுதியுட்பட 15 பிராந்தியங்களை சிகப்பு மண்டலங்களாகப் பிரகடனப்படுத்தி இத்தாலிய அரசு தனிமைப்படுத்துகிறது

லொம்பார்டியாவின் முக்கிய பிராந்தியமான மிலான் உட்பட, எமிலியா-ரோமனா பிராந்தியத்தில் மோடெனா, பர்மா, பியாசென்சா, ரெஜியோ எமிலியா மற்றும் ரிமினி. வெனிடோ பிராந்தியத்தில் வெனிஸ், படுவா மற்றும் ட்ரெவிசோ. பீட்மாண்டில் ஆஸ்டி மற்றும் அலெஸாண்ட்ரியா, மற்றும் மார்ச்சேவின் மத்திய பிராந்தியத்தில் உள்ள பெசாரோ மற்றும் அர்பினோ மாகாணம் ஆகியவை சிகப்பு மண்டலங்களாக இத்தாலிய அரசால் பிரகடனப்படுத்தப்படும் பகுதிகளாகும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.