சாவோ போலோ, பிரேசில் :

குற்ற செயல்கள் அதிகம் நிகழும் பிரேசில் சிறைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் எப்பொழுதும் இருக்கும் பலநேரங்களில் சிறைச்சாலையில் வன்முறைகளும் நிகழ்வதுண்டு. அதுபோல், நேற்று இங்குள்ள சிறையில் இருந்து 1300 க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் சாவோ போலோ மாநிலத்தில் இருக்கும் சிறைகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்க பிரேசில் அரசு திட்டமிட்டிருந்தது.

சிறை வளாகத்தில் அதிக கூட்டம் சேராமல் இருக்க, சிறைக்கைதிகளை வழக்கம் போல் காலை நேரத்தில் அறைகளில் இருந்து வெளியில் விடாமல், சிறைக்குள்ளேயே அடைத்து வைக்க முடிவெடுத்து, திங்கள் கிழமை முதல் அமல்படுத்த நினைத்தது சிறைத்துறை, இதை அறிந்த சிறைக்கைதிகள் ஞாயிறன்று சிறைகளில் இருந்து தப்பி ஓடினர்.

சிறைக்கைதிகள் தப்பியோடும் வீடியோவை அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டது, இருந்தபோதும் அதில் எந்த சிறையில் இருந்து வெளியேறினார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அதேவேளையில், சாவோ போலோ மாநிலத்தின் மொங்காகு, ட்ரெம்பே, போர்டோ பெலிஸ் மற்றும் மிராண்டபோலிஸ் ஆகிய நான்கு சிறைகளில் இருந்து இவர்கள் தப்பி ஓடியதாக சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன மேலும் இதனை சிறைத்துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“முதல் பிரதான கட்டளை” என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சாவோ பாலோ மாநில சிறைக்கைதிகள் பிரேசிலின் மிக சக்திவாய்ந்த கொள்ளை கும்பலாக கருதப்படுகிறது. இந்த கொள்ளை கும்பல் ஆயுத கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பெருங்குற்றங்களில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று சிறைக்கைதிகள் பலநூறு பேர் ஒரேநேரத்தில் சிறையிலிருந்து தப்பியோடுவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.